ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கண்மாய் நீர்வரத்து கால்வாயை தூர்வார வலியுறுத்தல்


ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கண்மாய் நீர்வரத்து கால்வாயை தூர்வார வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2019 3:45 AM IST (Updated: 15 May 2019 3:42 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கண்மாய் வறண்டு விட்ட நிலையில் நீர்வரத்து கால்வாயை தூர்வார வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை ஐகோர்ட்டு சமீபத்தில் சுட்டிக்காட்டி பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த நிலையில் நீர்நிலைகள் எந்த அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது என்பதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய கண்மாயும் ஒரு உதாரணம் ஆகும்.

மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாயான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயின் கீழ் 1,400 ஏக்கர் நிலங்கள் கால்வாய் பாசனம் மற்றும் கிணற்று பாசன வசதி பெறுகின்றன. கண்மாயிலும், நீர்வரத்து கால்வாய்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தும் பல கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த கண்மாயின் நீர் இருப்பு மூலம் சிவகாசி வரை நிலத்தடி நீர்மட்டம் உயர ஆதாரமாக இருக்கிறது.

இந்த கண்மாய் நீரின்றி வறண்டு உள்ளதால், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது.

மழை மறைவு பகுதியாக இருப்பதால் போதுமான மழை பொழிவும் இல்லை. பொழியும் மழை நீர்வரும் பகுதியை தூர்வாரத காரணத்தால், கண்மாய்க்கு போதுமான நீர் வரவில்லை. இந்த பகுதியின் நீராதாரத்தை வளப்படுத்தும், அழகர் அணை திட்டமும் பல ஆண்டுகளாக தேர்தல் கால வாக்குறுதியாகவே தொடர்கிறது.

இது சாத்தியமில்லாத திட்டம் என முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது, பம்பை அச்சங்கோவில் வைப்பாறு திட்டத்தில், புதிய அழகர் அணை திட்டம் செயல்படுத்த திட்டம் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதனை செயல்படுத்த எந்த முனைப்பும் காட்டியதாக தெரியவில்லை.

இதுகுறித்து, இனாம் கரிசல்குளத்தை சேர்ந்த பாதமுத்து என்ற விவசாயி கூறியதாவது:–

பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பாதிக்கு மேற்பட்ட நிலங்கள் தரிசாகவும், வீட்டு மனையாகவும் மாறி வருகின்றன.

இந்த சூழலில், மான், பன்றி போன்ற காட்டு விலங்குகள் கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் நடமாடுகின்றன. விவசாயிகள் எத்தனை துன்பங்களைத்தான் அனுபவிப்பது என்று தெரியவில்லை.

மழை மறைவு பகுதிகளில் அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும். புதிய அழகர் அணை திட்டத்தை செயல்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

1 More update

Next Story