கோவையில் பட்டப்பகலில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பயங்கரம் , கோர்ட்டில் இருந்து வெளியே வந்த 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு


கோவையில் பட்டப்பகலில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பயங்கரம் , கோர்ட்டில் இருந்து வெளியே வந்த 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2019 4:00 AM IST (Updated: 15 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே பட்டப்பகலில் 2 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. கோர்ட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை, 

கோவை கணபதி காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நடராஜ். இவர் க.க. சாவடியில் உள்ள தனியார் ஒர்க் ஷாப்பில் வெல்டராக வேலை செய்து வருகிறார். அவருடைய மகன் பிரதீப் (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கார் ஷோரூமில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முன்விரோதம் காரணமாக கணபதி சங்கனூர் சாலையில் சந்தோஷ்குமார் (25) என்பவரை கத்தியால் குத்திய வழக்கில் பிரதீப் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த், ராஜேஷ் ஆகிய 3 பேரை சரவணம்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் பிரதீப்புக்கு கடந்த மாதம் 29-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்பேரில் அவர் கோவை 2-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் காலையில் கையெழுத்து போட்டு வந்தார்.

வழக்கம்போல நேற்று காலை பிரதீப், தனது நண்பர் தமிழ்வாணன் (21) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை கோர்ட்டுக்கு வந்தார். அவர் 10.30 மணியளவில் கையெழுத்து போட்டு விட்டு கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார்.
பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை பிரதீப் ஓட்டினார். தமிழ்வாணன் பின்னால் உட்கார்ந்திருந்தார். அவர்கள் கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே வந்து 100 அடி தூரத்தில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் அந்த சாலையில் பிரதீப் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டரை நோக்கி நடுரோட்டில் ஒருவர் அரிவாளுடன் ஓடிவந்தார். அவரை பார்த்த பதறிபோன பிரதீப் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி உடன் இருந்த நண்பருடன் தப்பி ஓட முயன்றார்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரில் ஒருவர் அரிவாளுடன் ஓடிவந்தார். ஆயுதங்களுடன் நின்றவர்களை பார்த்ததும் அங்கு இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதற்கிடையே 4 பேர் பிரதீப் மற்றும் தமிழ்வாணனை சுற்றி வளைத்தனர்.

அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதற்குள் 4 பேரும் சேர்ந்து பிரதீப் மற்றும் தமிழ்வாணனை சரமாரியாக வெட்டினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் சாய்ந்தனர். மீண்டும் எழுந்து ஓட முயன்றும் 4 பேரும் அவர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் பிரதீப்பின் கை, மணிக்கட்டு, கழுத்து, கால் உள்பட 8 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. தமிழ்வாணனின் முதுகு, கை, கால்களிலும் வெட்டு விழுந்தது. இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள்.

கண்இமைக்கும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. பின்னர் அந்த 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பினர். சினிமாவில் வருவதுபோல் பட்டபகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்தது.

உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அரிவாளால் வெட்டியதில் தமிழ்வாணனின் நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் நேற்று மதியம் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த இடத்தில் ரத்தம் ஆங்காங்கே உறைந்து கிடந்தது. பிரதீப் வந்த ஸ்கூட்டர் முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது.

சம்பவ இடத்துக்கு கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் விரைந்து சென்று விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய 4 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும், பிரதீப் மற்றும் தமிழ்வாணனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கோவை மூர்மார்க்கெட் பகுதியை சேர்ந்த சதீஷ், சூர்யா, தனபால், ஹரி ஆகியோர் சேர்ந்து 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story