மேல கீரப்பாளையம், நல்ல தண்ணீர் குளத்தை தூர்வார வேண்டும் - சிதம்பரம் சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு


மேல கீரப்பாளையம், நல்ல தண்ணீர் குளத்தை தூர்வார வேண்டும் - சிதம்பரம் சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 14 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 12:13 AM GMT)

மேல கீரப்பாளையம் நல்ல தண்ணீர் குளத்தை தூர்வார வேண்டும் என்று சிதம்பரம் சப்-கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

சிதம்பரம்,

தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் தலைமையில் மேல கீரப்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள் நேற்று முன்தினம் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு சப்-கலெக்டர் விசுமகாஜனை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மேலகீரப்பாளையம் ஊராட்சிக்கு சொந்தமாக நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த காலங்களில் இந்த குளத்தை 7 கிராம மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் பராமரிப்பின்றி தூர்ந்துபோய், ஆகாய தாமரை படர்ந்து கால் நடைகள் கூட தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் உள்ளது.

இது சம்பந்தமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை தொடர்ந்து பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் திட்ட அலுவலர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு அளித்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே குளத்தில் வண்டல் மண் எடுத்து தூர்வாரி கரையை பலப்படுத்திடவும், அருகில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Next Story