மாவட்ட செய்திகள்

ராயல் ராஜஸ்தானில் சொகுசு பயணம் + "||" + Luxury travel in Royal Rajasthan

ராயல் ராஜஸ்தானில் சொகுசு பயணம்

ராயல் ராஜஸ்தானில் சொகுசு பயணம்
இந்தியாவில் இயக்கப்படும் சொகுசு சுற்றுலா ரயில்களில் மிகவும் பிரபலமானது ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் சுற்றுலா ரெயிலாகும்.
சுற்றுலா ரயில்களில் மிகவும் பிரபலமானது ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் சுற்றுலா ரெயிலாகும். பேலஸ் ஆன் வீல்ஸ் சுற்றுலா ரெயிலுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்த ரெயில் சேவை ராஜஸ்தானை சுற்றியுள்ள முக்கியமான சுற்றுலா பகுதிகளை நோக்கி இயக்கப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள முக்கியமான சுற்றுலா பகுதிகள், வனவிலங்கு சரணாலயம், வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் ஆகியவற்றை இந்த சுற்றுலா ரெயிலில் பயணம் செய்யும்போது கண்டு களிக்கலாம்.

இந்த சுற்றுலா ரெயிலில் மொத்தம் 14 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. இவை அனைத்துமே சொகுசு பெட்டிகளாக வடிவமைக்கப்பட்டவை. பேலஸ் ஆன் வீல்ஸ் ரெயில் பெட்டிகளைப் போலவே இதுவும் வெகு அழகாக வடிவமைக்கப்பட்டவை. இதில் டீலக்ஸ் மற்றும் சூப்பர் டீலக்ஸ் என்ற வகையிலான பெட்டிகள் உள்ளன. இவை அனைத்துமே வை-பை இணைப்பு, சேட்டிலைட் டி.வி., சேனல் மியூசிக், அவரவருக்கு ஏற்ப ஏ.சி. அளவை கட்டுப்படுத்திக் கொள்ளும் வசதி இதில் உள்ளன.

டீலக்ஸ் ரெயில் பெட்டிகள் 3 உள்ளன. இவை ரூபி, சபையர், பேர்ல் என்ற பெயரில் அமைந்துள்ளன. இதில் ஹவா மஹால், பத்மினி மஹால், கிஷோரி மஹால், பூல் மஹால், தாஜ் மஹால் என சூப்பர் டீலக்ஸ் பெட்டிகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன. இரண்டு பெட்டிகள் டயமண்ட், எமரால்டு என்றும் அழைக்கப்படுகின்றன. அனைத்து பெட்டிகளிலுமே அழகிய குளியலறை, ஷவர் கியூபிகிள், கண்ணாடியால் ஆன வாஷ் பேசின் ஆகிய அனைத்தும் மன்னர் காலத்து அனுபவத்தை உங்களுக்கு நிச்சயம் அளிக்கும்.

இந்த ரெயிலில் பயணிப்பவர்களுக்கென 2 பெட்டிகள் சமையல் அறைகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்வர்ண மஹால் மற்றும் ஷீஷ் மஹால் என்று இவை அழைக்கப்படுகின்றன. ஸ்வர்ண மஹால் சமையலறை மற்றும் சாப்பிடும் பகுதி முழுவதும் தங்க நிற வேலைப்பாடுகள் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன. ஷீஷ் மஹால் பகுதியானது சர விளக்குகளால் ஜொலிக்கிறது. இவ்விரு உணவு அறைகளிலும் இந்தியன் கான்டினென்டல், இத்தாலியன் மற்றும் சீன வகை உணவுகள் உள்ளன. இந்திய சமையலறையில் வித்தியாசமான சைவ மற்றும் அசைவ உணவுகள் கிடைக்கும்.

அதேபோல மருத்துவ குணம் நிறைந்த முளைகட்டிய பீன்ஸ் வகைகளும் இங்கு அளிக்கப்படுகிறது. அசைவ உணவுகள் கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி வகைகளில் சமைக்கப்பட்ட பல்வேறு வகை உணவுகளும் இங்கு கிடைக்கும். இது தவிர தேவைப்படும் போதெல்லாம் டீ, காபி, பிஸ்கெட் உள்ளிட்டவையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும் கிடைக்கும். பழ வகைகள் அனைத்தும் நீங்கள் கேட்டபோதெல்லாம் கிடைக்கும். அதேபோல பழச்சாறுகளும் வழங்கப்படும்.

சில பிரத்யேக பொருள்கள் விற்பனைக்கென தனி பெட்டி உள்ளது. இதில் கைவினைப் பொருள்கள் குறிப்பாக பீர் மக், மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஜூவல்லரி தயாரிப்பு, மென்மையான தோலினால் ஆன போட்டோ பிரேம் ஆகியன கிடைக்கும்.

இவை தவிர ராயல் ஸ்பா இந்த சொகுசு ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பயண திட்டமானது 7 பகல் 8 இரவுப் பொழுதுகளை உள்ளடக்கியதாக இருக்கும். புது டெல்லி சப்தர்ஜங் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜோத்பூர், உதய்பூர், சித்திரதுர்க், ஜெய்ப்பூர், கஜுரேகா, வாரணாசி, ஆக்ரா வழியாக டெல்லியை வந்தடையும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, கஜுரேகா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளையும் பார்வையிடலாம். ரந்தம்போர் தேசிய வன பூங்காவையும் சுற்றிப் பார்க்கும் வகையில் இப்பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சொகுசு சுற்றுலா ரெயிலில் பயண திட்டத்தை முன்பதிவு செய்து ராஜ உபசாரத்தில் பயணம் செய்யலாமே.


அதிகம் வாசிக்கப்பட்டவை