கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் சேலம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார்


கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் சேலம் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 3:51 PM GMT)

கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பா.ஜனதா கட்சி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

சேலம், 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்டார். இதற்கு பா.ஜனதா மற்றும் பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருவதோடு கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், சேலம் மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் கோபிநாத் தலைமையில் கட்சி நிர்வாகிகள் நேற்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பெயர் குறிப்பிட்டு பேசியது இந்து மக்களை அவமானப்படுத்துவதாகவும், கேவலப்படுத்துவதாகவும் உள்ளது. இது ஒவ்வொரு இந்துவின் மனதிலும், ஆழமான வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், உணர்ச்சி பொங்கும் விதத்திலும் இருந்தது. மேலும், அவருடைய பேச்சு இந்து மதம் மற்றும் முஸ்லிம் மதத்தினரிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது. அவருடைய பிரசார பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் அனைத்து இந்துக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது.

எனவே, இந்து, முஸ்லிம் இடையே கலவரத்தை தூண்டும்படி பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் நேற்று பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் கமல்ஹாசன் மீது புகார் மனு அளித்தனர். அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறி இந்துக்களை இழிவுப்படுத்தியும், மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், அவர் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், என கூறப்பட்டிருந்தது.


Next Story