சேலத்தில் சூறைக்காற்றுடன் 2–வது நாளாக பலத்த மழை மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சேலத்தில் சூறைக்காற்றுடன் நேற்று 2–வது நாளாக பலத்த மழை பெய்தது. மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னங்குறிச்சி,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்தது. 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. பின்னர் நேற்று காலை வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து 2–வது நாளாக சேலத்தில் பல இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பின்னர் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
சேலம் கன்னங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் கன்னங்குறிச்சி–ஏற்காடு செல்லும் பிரதான சாலையில் இருந்த வேப்பமரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
இதேபோல் ஏற்காடு சாலை கே.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகே மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது.
நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 26.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:– கெங்கவல்லி–18.4, ஆத்தூர்–16.8, மேட்டூர்–4.4, சேலம்–3.6, ஆணைமடுவு–3.