‘மது போதையில் இருந்ததால் தொழிலாளியை கொன்றேன்’ கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம்
மது போதையில் இருந்ததால் தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டேன் என கைதான உறவினர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சூரமங்கலம்,
சேலம் பழைய சூரமங்கலம் பெரியார் தெரு ஓடை பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 55). தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் காளிதாஸ் (32). இவர், அங்குள்ள மயானத்தில் குழிவெட்டும் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. நேற்றுமுன்தினம் நல்லதம்பி தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த காளிதாஸ் தெருவில் கிடந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நல்லதம்பியின் மனைவி ராஜம், சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் காளிதாசை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் எதற்காக நல்லதம்பியை கொலை செய்தார்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பாக போலீசாரிடம் காளிதாஸ் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:–
நல்லதம்பியும், நானும் உறவினர்கள். நாங்கள் இருவரும் அடிக்கடி மதுக்கடைக்கு சென்று மது அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தோம். சம்பவத்தன்று இருவரும் மது அருந்தினோம். எங்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவரிடம் அடிக்கடி தகராறு செய்வேன். ஒருநாள் நல்லதம்பி என்னிடம் வந்து திட்டுவதை நிறுத்திக்கொள் என்றும், இல்லாவிட்டால் போலீசில் புகார் செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் அவர் மீது எனக்கு கோபம் ஏற்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இருவரும் மதுக்கடைக்கு சென்று மது அருந்தினோம். பின்னர் நல்லதம்பி அவரது வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நான், அவரது வீட்டிற்கு சென்று வாசலில் படுத்திருந்த அவர் மீது பெரிய கல்லை தூக்கிப்போட்டேன். அவ்வளவு தான் எனக்கு தெரியும். ஆனால் அதன்பிறகு நல்லதம்பி இறந்துவிட்டார் என்பது எனக்கு தெரியும். மது போதையில் இருந்ததால் அவரை கொலை செய்துவிட்டேன், என்று காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து காளிதாசை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.