ஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை அபேஸ்


ஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 15 May 2019 7:44 PM GMT (Updated: 15 May 2019 7:44 PM GMT)

ஈரோட்டில் நகைக்கடை ஊழியரிடம் நூதன முறையில் 9 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு நகைக்கடையின் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டார். கடையின் மேலாளர் அந்த அழைப்பை ஏற்று பேசினார். அப்போது எதிர்முனையில் பேசியவர், ஈரோடு பெருந்துறைரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் பேசுவதாகவும், தனது தாய்க்கு பிறந்தநாள் பரிசாக தங்க நகை கொடுக்க இருப்பதாகவும், அதற்காக 3 தங்க சங்கிலியை ஆஸ்பத்திரிக்கு கொடுத்து விடுமாறு கூறியுள்ளார்.

அதை நம்பிய அந்த கடையின் மேலாளர், 9 பவுன் நகையை எடுத்து நகைக்கடை ஊழியரான ஈரோடு ஆசிரியர் காலனி மாதவி வீதியை சேர்ந்த அங்கப்பன் (வயது 56) என்பவரிடம் ஆஸ்பத்திரிக்கு கொடுத்து அனுப்பினார்.

அங்கப்பனும் நகையை எடுத்துக்கொண்டு அங்கு சென்றார். அவர் வந்ததை பார்த்ததும், ஆஸ்பத்திரியின் வரவேற்பு அறையில் உட்கார்ந்து இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், “நீங்கள் தானே நகைக்கடையில் இருந்து வந்துள்ளர்கள். உங்களுக்காக தான் காத்திருக்கிறேன். என்னிடம் நகையை கொடுங்கள். நான் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருகிறேன். அதுவரை வரவேற்பு அறையில் காத்திருக்கவும்”, என்று கூறினார். அதைத்தொடர்ந்து அங்கப்பன் 9 பவுன் நகையை அந்த நபரிடம் கொடுத்துவிட்டு வரவேற்பு அறையில் உட்கார்ந்து இருந்தார்.

நீண்ட நேரமாகியும் அந்த நபர் வெளியே வரவில்லை. அதைத்தொடர்ந்து வரவேற்பு அறையில் இருந்த ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவரிடம் நகையை பற்றி அங்கப்பன் விசாரித்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் இருந்து எந்தவொரு நகையும் ஆர்டர் செய்யவில்லை என்று தெரிவித்தார். அதன்பிறகு அங்கப்பன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். நகையை வாங்கிய மர்மநபர் அங்கிருந்து வேறு வழியாக தப்பி சென்றது பிறகு தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அங்கப்பன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் நகையை அபேஸ் செய்து தப்பி சென்றவரின் படம் பதிவாகி இருந்தது. அந்த பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் நகையை அபேஸ் செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story