கீழ் கோத்தகிரி அருகே, மயங்கி விழுந்து இறந்த 9 குரங்குகள் - விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?


கீழ் கோத்தகிரி அருகே, மயங்கி விழுந்து இறந்த 9 குரங்குகள் - விஷம் வைத்து கொல்லப்பட்டனவா?
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 8:42 PM GMT)

கீழ் கோத்தகிரி அருகே 9 குரங்குகள் மயங்கி விழுந்து இறந்தன. அவை விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என்று மாவட்ட உதவி வன அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார்.

கோத்தகிரி,

கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்கோத்தகிரி அருகே அம்மன் நகர் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குரங்குகள் கூட்டமாக முகாமிட்டு இருந்தன. இந்த குரங்குகள் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்ததுடன், குடியிருப்புக்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அம்மன் நகர் பகுதியை ஒட்டி உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சில்வர் ஓக் மரத்தின் மீது 9 குரங்குகள் அமர்ந்திருந்தன. சிறிது நேரத்தில் அவை ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி கீழே விழுந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன், வனவர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது மயங்கி விழுந்த குரங்குகள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் சரவணகுமார் சம்பவ இடத்துக்கு சென்றார். பின்னர் குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டனவா? என்று பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். இதற்கிடையில் கீழ் கோத்தகிரி கால்நடை டாக்டர்கள் ரேவதி, உமாதேவி ஆகியோர் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து உடல்கள் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டன. இதுகுறித்து கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் கூறியதாவது:-

குரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு, உடற்கூறுகள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அம்மன் நகரில் குரங்குகள் வழக்கமாக தின்னக்கூடிய முட்டைக்கோஸ், பீன்ஸ், ஐஸ்பெர்க் உள்ளிட்ட காய்கறிகளே பயிரிடப்பட்டு உள்ளன. இந்த பயிர்களில் களைக்கொல்லி அல்லது நோய் தாக்காமல் இருக்க மருந்துகள் அதிகளவில் அடிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அவைகளை தின்றதால், குரங்குகள் இறந்திருக்கலாம். எனினும் உடற்கூறு ஆய்வு முடிவு வந்த பிறகே குரங்குகள் இறந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story