கூடலூர்- கேரள மலைப்பாதையில், லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்


கூடலூர்- கேரள மலைப்பாதையில், லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 2 டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 8:42 PM GMT)

கூடலூர்- கேரள மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில், 2 டிரைவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர்.

கூடலூர்,

நீலகிரியில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. ஊட்டியில் நாளை(வெள்ளிக்கிழமை) மலர் கண்காட்சி நடக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது. இதேபோல் கேரளா- கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப வாகன விபத்துகளும் தொடர்கிறது.

கூடலூர்- ஊட்டி மற்றும் கேரள செல்லும் சாலைகள் மலைப்பாதைகளாக உள்ளது. சமவெளியில் இருந்து வரும் டிரைவர்கள் மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதனால் சீசன் காலங்களில் தினமும் வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் கீழ்நாடுகாணி பகுதியில் மலைப்பாங்கான பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கூடலூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இதேபோல் கேரளாவில் இருந்து கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு மற்றொரு லாரி எதிரே வந்து கொண்டிருந்தது. அப்போது 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர்கள் 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

மேலும் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சாலையின் ஒருபுறம் வாகன போக்குவரத்தும் தொடங்கியது. இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- சமவெளியில் இருந்து மலைப்பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் டிரைவர்கள் வாகனங்களை மிகுந்த கவனமுடன் இயக்க வேண்டும். மேட்டில் இருந்து தாழ்வான இடத்துக்கு செல்லும்போது 2-வது கியரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரேக்கை அடிக்கடி மிதித்தவாறு ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் கண்டிப்பாக அணிய வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களை இயக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் வாகனங்களை வேகமாக ஓட்டக் கூடாது. இவ்வாறு வலியுறுத்தி உள்ளனர்.

Next Story