தேர்தல் 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால், சின்னத்தை பார்க்காமல் எண்ணத்தை கவனித்து வாக்களியுங்கள் - சீமான் பேச்சு
தேர்தல் 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதால், சின்னத்தை பார்த்து வாக்களிக்காமல் எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடுங்கள் என்று சீமான் பேசினார்.
பொள்ளாச்சி,
சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் விஜயராகவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் செஞ்சேரிமலையில் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசியல் என்பது மிக இழிவாக கற்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சிகள் நிறுவனமாகிவிட்டன. வேட்பாளர்களை நேர்காணல் செய்து பலகோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கும் வியாபாரிகளாக மாறிவிட்டனர். வேட்பாளர் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி முதலீடு செய்கிறார் என்றால் மக்களுக்கு சேவை செய்ய வருகிறாரா? என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இதை தகர்த்து எறிந்து புதிய அரசியலை கொண்டு வராமல் நல்ல ஆட்சியை உருவாக்க முடியாது. நாங்கள் தோற்பதற்காக தானே தேர்தலில் போட்டியிடுகிறோம் என்று கேட்கிறார்கள். தோற்பதற்காக அல்ல, நல்ல அரசியலை தொடங்குவதற்காக போட்டியிடுகிறோம். வேட்பாளர்களோ, தலைவர்களோ வெற்றியை தீர்மானிப்பது இல்லை. வாக்களிக்கும் மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
எங்களை விமர்சிப்பதை பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. விமர்சனமும் ஒருவித பாராட்டுதான். காயப்படுத்தும் கற்கள் இல்லை. நாங்கள் உணர்ந்து கொண்ட தத்துவம் விமர்சனம் இல்லாமல் வளர முடியாது என்பதுதான். ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்கிறோம். ஆனால் தொடர்ச்சியாக தேர்தல் களத்தில் நமது உரிமையை விற்பது என்பது அவமானம் ஆகும். வாக்கை விற்கவில்லை, வாழ்க்கையை விற்கிறோம்.
தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை இல்லை. அடுத்த 5 ஆண்டு வாழ்க்கையை தீர்மானிக்கும் சந்தை. சின்னத்தை பார்த்து வாக்களிப்பதை நிறுத்துங்கள், நல்ல எண்ணத்தை கவனித்து ஓட்டுப்போடும் முறையை செயல்படுத்துங்கள். தேர்தல் களத்தில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என்று சொல்ல ஒரு கட்சியாவது இருக்கிறதா? பணம் இருப்பவன்தான் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை இருக்கும்போது எப்படி நல்ல ஆட்சி நடக்கும்.
நாங்கள் வாக்குக்காக தேர்தலில் நிற்கவில்லை. எங்களின் இன மக்களுக்காக தேர்தலில் நின்று பேசி வருகிறோம். நமது நாடு, நிலமற்ற நாடாக மாறிவருகிறது. உயிரினங்கள் வாழ தகுதியற்ற பாலைவனமாக மாறி வருகிறது. தமிழகத்தில் உள்ள 24 மாவட்டத்தை வறட்சியாக அறிவித்து உள்ளது. அப்படி என்றால் தண்ணீர் இல்லை என்று அர்த்தம்.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் முதல் நாங்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. பின்னுக்கு செல்லவில்லை. அ.தி.மு.க., தி.மு.க.வை வெல்ல முடியாது என்று கூறுகிறார்கள். வெல்ல முடியாத படை உலகத்திலேயே இல்லை. அ.தி.மு.க., தி.மு.க. செத்துப்போன கட்சிகள். எனவேதான் ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.
கல்வி சந்தை பொருளாக மாற்றப்பட்டு விட்டது. அறிவை வளர்க்கும் கூடம் இல்லை. வர்த்தக, வியாபார மையமாக மாற்றப்பட்டு விட்டது. நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகள் நலனுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியில் கொள்ளையடிக்கிறார்கள். இது கொடுமை இல்லையா?.
தேர்தல் என்றால் என்ன மாறுதல் வருகிறது என்பதை படித்த இளைஞர்கள் உணர வேண்டும். அதே ஆட்சி முறைதான் இருக்கிறது. ஊழல் நிறைந்த கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அவர்கள் நல்லது செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்கிறார்கள். ஏன் இருந்தபோது செய்யவில்லை.
எரிவாயு குழாய் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது. ஆனால் தமிழகத்தில் விவசாய நிலங்களுக்கு நடுவே செல்கிறது. இங்கும் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்லுங்கள் என்று சொல்லி இருக்க வேண்டியதுதானே? அதை சொல்ல யாருமே முன்வர வில்லை. தமிழகத்தில் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. ஆனால் அதில் இருந்து கிடைக்கும் பொருட்களை மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறிய நாடாக இருக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில் தென்னை மரத்தில் இருந்து தயாரிக்கும் பொருட்களை வைத்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஆண்டுக்கு ரூ.17 ஆயிரம் கோடி சம்பாதிக்கிறது. ஆனால் நமது நாட்டில் தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களை பதப்படுத்தி வைக்க குளிர்பதன கிடங்குதான் கேட்கிறார்கள். அதை செய்து கொடுக்க முடியவில்லை. நாங்கள் வந்தால் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுப்போம்.
எனவே நீங்கள் எங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயராகவனுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வேட்பாளர் விஜயராகவன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story