அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை


அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகள் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 15 May 2019 10:15 PM GMT (Updated: 15 May 2019 9:23 PM GMT)

அதிராம்பட்டினத்தில், அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முருகன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோடை விடுமுறையை ஒட்டி குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முருகனின் உறவினர்கள், முருகன் ஊரில் இல்லாதபோது அவரது வீடு திறந்து கிடந்ததை பார்த்தபோது வீட்டின் முன்புறக்கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இது குறித்து சென்னையில் இருந்த முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

31 பவுன் நகைகள் கொள்ளை

இதையடுத்து சென்னையில் இருந்து ஊருக்கு விரைந்து தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது முருகன் வெளியூர் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள், முருகன் வீட்டுக்கு வந்து வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டுக்குள் பீரோவில் இருந்த 31 பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இது குறித்து முருகன், அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.

அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிராம்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story