திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை: ‘தொழில் போட்டியால் தீர்த்து கட்டினோம்’ சரண் அடைந்த 2 பேர் வாக்குமூலம்


திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை: ‘தொழில் போட்டியால் தீர்த்து கட்டினோம்’ சரண் அடைந்த 2 பேர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 9:32 PM GMT)

திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கொலை சம்பவத்தில் ‘தொழில் போட்டியால் தீர்த்து கட்டினோம்’ என்று சரண் அடைந்த 2 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 53). இவர் திருப்பூர் அங்கேரிப்பாளையத்தில் தங்கியிருந்து கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் கடந்த 5–ந் தேதி காலை கட்டிட பணிக்காக 60 அடி ரோடு சந்திப்பில் உள்ள பூங்கா அருகே தனது மோட்டார் சைக்கிளில் ஆரோக்கியசாமி சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர்கள் ஆரோக்கியசாமியை மறித்து கத்தியால் அவரை குத்தி கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஆரோக்கியசாமியை கத்தியால் குத்தி விட்டு தப்பியது மதுரையை சேர்ந்த அறிவழகன்(35) என்பதும், அவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில் வசித்து வந்ததும் தெரியவந்தது. அவர் கட்டிடத்தொழிலாளி ஆவார். தொழில் போட்டியால் இவர்களுக்கு ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.

தலைமறைவாக உள்ள அறிவழகனை பிடிப்பதற்காக, வடக்கு போலீசார் மதுரை விரைந்தனர். இந்த நிலையில் அறிவழகன் மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த ஆனந்த் (30) ஆகிய 2 பேரும் மதுரை 5–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த 6–ந் தேதி சரணடைந்தனர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி அவர்களை மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திருப்பூர் வடக்கு போலீசார் திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.1–ல் அனுமதி கேட்டனர். ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அளித்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் நேற்று முன்தினம் அறிவழகன், ஆனந்த் ஆகிய 2 பேரையும் போலீஸ் பாதுகாப்பில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் 2 பேரும் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–

ஆரோக்கியசாமி மேஸ்திரியாக இருந்து கட்டிட பணி செய்துள்ளார். அவர் வேலை செய்யும் உயரமான கட்டிடங்களுக்கு கட்டுமான பொருட்களை தனது ஆட்கள் உதவியுடன் கொண்டு செல்லும் வேலையை அறிவழகன் செய்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்தே இந்த வேலையை செய்துள்ளனர். இந்த நிலையில் ஆரோக்கியசாமி, தான் வேலை செய்த கட்டிடங்களில் கட்டுமான பொருட்களை தூக்கி செல்லும் பணிக்கு அறிவழகனை அழைக்காமல் வேறு ஆட்களை பயன்படுத்தியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 4–ந் தேதி இரவு அறிவழகனுக்கும், ஆரோக்கியசாமிக்கும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆரோக்கியசாமி, அறிவழகனுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த கோபத்தில் இருந்த அறிவழகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆரோக்கியசாமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி அடுத்தநாள் காலை கத்தியுடன் தனது நண்பரான ஆனந்த்துடன் வந்துள்ளார். ஆரோக்கியசாமியை பார்த்ததும் தகராறு ஏற்பட்டு பின்னர் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணை முடிந்ததும் நேற்றுமாலை அறிவழகன், ஆனந்த் ஆகிய 2 பேரையும் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story