அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளை கால, அளவு குறிப்பிட்டு நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்; நாம் தமிழர் கட்சி கோரிக்கை


அரசு ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகளை கால, அளவு குறிப்பிட்டு நோயாளிகளுக்கு வழங்க வேண்டும்; நாம் தமிழர் கட்சி கோரிக்கை
x
தினத்தந்தி 16 May 2019 4:30 AM IST (Updated: 16 May 2019 3:25 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு கால,அளவு குறிப்பிட்டு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி செயலாளர் வெங்குளம் ராஜூ தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:– ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் மருத்துவ தேவைகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளையே நம்பி உள்ளனர். முதல்–அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தியதற்கு பின்னர் பெரும்பாலானவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளையே தங்களின் மருத்துவ சிகிச்சைக்கு நாடி வருகின்றனர்.

இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்து மாத்திரைகளை மருந்தாளுனர்கள் காலை, மதியம், மாலை, இரவு என்று குறிப்பிடாமலும், அளவுகளை குறிப்பிடாமலும் மொத்தமாக அள்ளி கொடுக்கின்றனர்.

இந்நிலையில் உடல் உபாதைகள், நோயின் தாக்கம், முதுமை போன்ற காரணங்களினால் மருந்துகள் குறித்து தெரியாமல் அளவுக்கதிகமாகவோ, குறைவாகவோ பயன்படுத்திவிடும் வாய்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உதவியாளர்கள் யாரும் இல்லாமல் தனியாக வாழும் முதியவர்களுக்கு இதுபோன்று மொத்தமாக வழங்குவது கவலை அளிப்பதாக உள்ளது.

இந்த நிலை ராமநாதபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரியிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அதிகம் உள்ளது. மாநிலம் முழுவதும் இதேபோன்ற நிலை நீடிப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இதுபோன்ற நிலையை மாற்றும் வகையில் நோயாளிகளின் மேல் அக்கறை கொண்டு மருந்து மாத்திரைகளை தனியார் மருத்துவமனைகளில் வழங்குவதுபோல தனியாக உரையில் காலை, மாலை, பிற்பகல், இரவு என குறிப்பிட்டும், சாப்பிடும் அளவினை குறிப்பிட்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story