காரியாபட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட மணலை ஏலம் விட வலியுறுத்தல்


காரியாபட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட மணலை ஏலம் விட வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2019 10:15 PM GMT (Updated: 15 May 2019 10:17 PM GMT)

காரியாபட்டி அருகே குண்டாற்றின் ஓரமாக பறிமுதல் செய்யப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள மணலை பொது ஏலம் விட வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் குண்டாற்றின் ஓரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மணல் குவித்து வைக்கப்பட்டது. இந்த மணல் யாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. எந்த வருடம் எவ்வளவு மணல் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் தெரியவில்லை. ஆனால் தற்போது இந்த பகுதியில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மணலை அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவின்பேரில் 70 யூனிட் மணல் அள்ளி கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த மணல் பட்டம்புதூர் அரசு பள்ளிக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தினமும் பல லாரிகளில் மணல் அள்ளிச்சென்று வருவதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மணலை வருவாய்த்துறையின் ஒத்துழைப்போடு அள்ளிவருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரு இடத்தில் மணல் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தால் அந்த மணலை அந்தப்பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களுக்கு அல்லது தனியார் கட்டிடங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முறையாக விளம்பரப்படுத்தி பொது ஏலம் விட்டு பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தினால் தான் பொது ஏலத்தின் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். பறிமுதல் செய்யப்பட்ட மணலை முறையாக பொது மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்தி பொது ஏலம் விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வருவாய்த் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மணலை அந்த இடத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் அள்ளி

வருவதாக அந்த நிலத்தின் உரிமையாளர், காரியாபட்டி தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே உரிய விசாரணை மேற்கொண்டு அந்த இடத்தில் எவ்வளவு மணல் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அங்கு 800–க்கும் மேற்பட்ட யூனிட் மணல் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் கூறி வருகின்றனர். எனவே வருவாய் துறையினர் முறையான கணக்கீடு செய்து பொது ஏலம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story