உள்ளாட்சி தேர்தலுக்காக 754 வாக்குச்சாவடிகள் கலெக்டர் சாந்தா தகவல்


உள்ளாட்சி தேர்தலுக்காக 754 வாக்குச்சாவடிகள் கலெக்டர் சாந்தா தகவல்
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 10:18 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் சாந்தா தெரிவித்து உள்ளார்.

பெரம்பலூர்,

ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் நகராட்சியில் 50, அரும்பாவூர் பேரூராட்சியில் 15, குரும்பலூர் பேரூராட்சியில் 15, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் 15, பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடிகளும், ஊரக உள்ளாட்சி பகுதிகளான ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 173, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 122, வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 169, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 180 என நகர்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் மொத்தம் 754 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

பொதுமக்கள் பார்வையிடலாம்

இந்த இறுதி வாக்குச்சாவடி பட்டியல்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட தேர்தல் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றார்.


Next Story