மாவட்ட செய்திகள்

ரகளை செய்த 11 பேர் கைது: எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு + "||" + Arrested 11 accused Kamal Haasan's talk about the anti-slogan

ரகளை செய்த 11 பேர் கைது: எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு

ரகளை செய்த 11 பேர் கைது: எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு
திருப்பரங்குன்றம் தேர்தல் பிரசார கூட்டத்தில் ரகளை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்கள் குறித்து கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.
திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று மதுரை தோப்பூர், அனுப்பானடி, வில்லாபுரம் ஹசிங்போர்டு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அதைத்தொடர்ந்து இரவில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கமல் பேசுவதை கேட்பதற்காக கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கூட்ட மேடைக்கு கமல்ஹாசன் வந்தவுடன், நிர்வாகி ஒருவர் வரவேற்றுப் பேசிக் கொண்டு இருந்தார்.


அந்த சமயத்தில் மேடையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மேட்டு குறுக்கு சந்தில் இருந்து சிலர் ஓடி வந்தனர். அவர்கள் “கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாரத் மாதா கீ ஜெய்” என்று எதிர்ப்பு கோஷம் எழுப்பி ரகளை செய்தனர்.

இதனால் அங்கு திடீர் சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் பாதுகாப்புக்கு இருந்த போலீசார் விரைந்து வந்து தடுப்பு அரணை ஏற்படுத்தினர். பின்னர் கோஷம் எழுப்பியவர்களை விரைந்து சென்று முன்னேற விடாமல் பிடித்தனர். மொத்தம் 11 பேர் பிடிபட்டனர். அவர்களை கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு கமல்ஹாசன் தனது பேச்சை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கே இருப்பவர்கள் அமைதியாக இருக்க வேண்டும். கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி கூட்டம் ஒன்று நடந்து கொண்டு இருந்த போது, அதில் சிறிய கும்பல் ஒன்று குழப்பம் விளைவிக்க முயற்சித்தது. அந்த கூட்டத்தை அப்புறப்படுத்த முயற்சித்த போது காந்தி, அனைவரும் அமைதியாக உட்காருங்கள் என்றார். அங்கு வெடி வைத்து இருந்தார்கள். ஆனால் இங்கு ஒன்றும் ஆகவில்லை. இது குறித்த காட்சி எனது ‘ஹேராம்’ படத்தில் வரும்.

இந்த கூட்டத்தை பார்த்து பொய்யை அஸ்திவாரமாக வைத்து கட்சியை வளர்த்தவர்களுக்கு வயிறு எரியத்தான் செய்யும். அதனால் சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். தேர்வு எழுதி பெயிலானவர்கள், தேர்ச்சி பெற்றவர்களை பார்த்து திட்டுவார்கள். அது தான் இங்கு நடந்தது. நான் இங்கு வந்தது சச்சரவுக்காக அல்ல. எங்கள் கூட்டம் மிகவும் அமைதியான கூட்டம். தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். கூட்டத்திற்கு வரும் குடித்தவர்கள் கூட எங்கள் கூட்டத்தில் இருந்து மிகவும் மரியாதையாக அப்புறப்படுத்தப்படுவார்கள். இது கூட எங்களது தாய்மார்களுக்காக.

இந்த விழா முடிந்து போகும் போது, இங்குள்ள குப்பைகளை அகற்றி விட்டுத்தான் எங்களது தொண்டர்கள் வீட்டுக்கு செல்வார்கள். குப்பையை அகற்றுவது எங்களுக்கு பழக்கம். அரசியலிலும் அதைத்தான் செய்ய வந்திருக்கிறோம்.

எனக்கு நிறைய கோபம் உண்டு. மக்களுக்காக அதனை அடக்கி வைத்து இருக்கிறேன். எனக்கு சாதி, மதம் பிடிக்காது. ஆனால் என் மக்களுக்கும், ஏன் என் மகளுக்கும் பிடிக்கும். அந்த சுதந்திரத்தை நான் தந்திருக்கிறேன். என்னை பார்த்து இந்து விரோதி என்று சொல்லி விளையாட்டு காட்டாதீர்கள். என்னை விரோதியாக நினைப்பது உங்களது நடத்தையும், நேர்மையின்மையும் தான் காட்டுகிறது. எனக்கு காந்தியின் சரித்திரம் தெரியுமா? என்று கேட்கிறார்கள். ஆனால் காந்தியாக மாற வேண்டும் என்ற எண்ணியவர்களில் நானும் ஒருவன். அதற்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.

சாதி, மதத்தை வைத்து விளையாடுவது பழைய விளையாட்டு. அது எங்களிடம் வேண்டாம். நான் இந்திய குடிமகன். என் நாட்டை பிரித்தாளக்கூடாது. ஏற்கனவே ஒன்று பிரித்தாகி விட்டது.

தேச பக்தியை எங்களுக்கு நீங்கள் சொல்லி தர வேண்டாம். தமிழகத்தில் காந்தி, ஜவகர், நேரு, போஸ் என்ற பெயரில் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆனால் அதுவே வடநாட்டில் ஒரு காமராஜர், அண்ணா என்று ஒருவராவது இருக்கிறார்களா? எங்களுக்கு புதுப்பாடம் எடுக்காதீர்கள். அதனை கற்றுக்கொடுக்கும் அருகதை உங்களுக்கு இல்லை. நீங்கள் கற்றுக்கொடுக்க நினைப்பது அடுக்கடுக்கான பொய்களை.

நாங்கள் நிஜ தரிசனத்தை பார்த்தவர்கள். இந்திய பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது தென்னகமாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தை கலைக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சலசலப்பு செய்தார்கள். ஆனால் கூட்டத்தையும், கட்சியையும் கலைக்க முடியாது. தமிழகத்தை அசைக்கவும் முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அனுப்பானடி பகுதியில் கமல்ஹாசன் கூறியதாவது:-

எங்களது வெற்றி உங்களது அன்பில் தெரிகிறது. சிஸ்டம் சரியாகத்தான் இருக்கிறது. மாற்றப்பட வேண்டியது சிலபஸ் தான். அதாவது பாடத்திட்டத்தை மாற்றினால்தான் முன்னேற்றம் வரும்.

காலத்தின் கட்டாயமாகத்தான் கடந்த 2 கட்சிகளை கொண்டு வந்தோம். தற்போது அந்த கட்சிகளை அகற்ற வேண்டியதும் காலத்தின் கட்டாயம் தான். அதற்கான சாயல் தான் இந்த கூட்டம். லஞ்சம், ஊழலை ஒழிக்க முடியாது, காசு வாங்கி தான் ஓட்டு போடுவார்கள் என்றும், இப்படி தான் அரசியல் நடக்கும் என்றும் கூறுபவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், நேர்மை இன்னும் தமிழகத்தில் இருக்கிறது. நேர்மைக்கு இந்த கூட்டமே உதாரணம்.

இங்கு காசு வாங்காமல் இவ்வளவு கூட்டம் வந்திருக்கிறது. ஓட்டும் அப்படித்தான் போட வேண்டும். பிற கட்சியினருக்கு, பதற்றம் வந்து விட்டதால் என் மீது வழக்கு போட வேண்டும் என நிற்கிறார்கள். நான் பேசியது என்ன? அதில் திரித்து கூறப்பட்டது என்ன?

நான் என் மக்களுக்கு வேண்டிய விஷயத்தை மட்டுமே பேசினேன். சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசவில்லை. எந்த மதத்துக்கும் ஆதரவாகவும், விரோதமாகவும் பேச மாட்டேன். மக்களின் சொத்துகளை வெளிநாட்டுக்கு விற்று வருகிறார்கள். நான் ஆட்சிக்கு வந்தால் மக்களின் சொத்துகளுக்கு காவலனாக மாறிவிடுவேன். எல்லா மத மக்களும் என் மக்கள் தான். எனக்கு சாதி தெரியாது. என் அப்பா என்னை அப்படி தான் வளர்த்திருக்கிறார். பரமக்குடியில் கேட்டுப்பாருங்கள் என் குடும்பத்தை பற்றி கூறுவார்கள்.

ஏ.சி.யில் இருந்த நான் வியர்வை, சூடு ஆகியவற்றில் மக்களுடன் மக்களாக இருக்கிறேன். இவை எல்லாமே எனக்கு பிடித்திருக்கிறது. எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காகத் தான். மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. நான் அசிங்கமாக பேசவில்லை. ‘மாண்புமிகு அய்யா வெளியே செல்லுங்கள்‘ என்று கூறிவிடுவேன். நான் ஒருபோதும் மாற்றி பேசமாட்டேன். எங்கள் வீட்டில் எல்லா மதமும் இருக்கிறது. தமிழகத்திலும் அப்படி தான் இருக்க வேண்டும். தேசபக்தி பற்றி யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டாம். தேசத்தை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.