கல்வி மேலாண்மை டிஜிட்டல் முறை திட்டம் அமல்: ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவர், ஆசிரியர் வருகை ஆன்லைனில் பதிவு


கல்வி மேலாண்மை டிஜிட்டல் முறை திட்டம் அமல்: ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவர், ஆசிரியர் வருகை ஆன்லைனில் பதிவு
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 10:49 PM GMT)

கல்வி மேலாண்மை டிஜிட்டல் முறை திட்டம் அமல்படுத்தப்படுவதால் ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவர், ஆசிரியர் வருகை ஆன்லைனில் பதிவு செய்யப்பட உள்ளது என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் வாசு தெரிவித்தார்.

திருச்சி,

தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கையில் உள்ள போலியை தடுக்கும் வகையில், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை டிஜிட்டல் முறை திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ‘எமிஸ்’ இணையத்தில் மாணவர்களின் பெயர், பெற்றோர், முகவரி, ரத்தப்பிரிவு, ஆதார் எண், செல்போன் எண் உள்பட பல்வேறு விவரங்கள் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறையால் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேலும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம், இடமாறுதல், பதவி உயர்வு, பாடத்திட்டம் உள்ளிட்டவையும் எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ‘எமிஸ்’ திட்டத்தை அரசு பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்துவது குறித்த திருச்சி கல்வி மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

ஜூன் மாதம் முதல் அமல்

கூட்டத்துக்கு, திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் வாசு கலந்து கொண்டு பேசியதாவது:-

கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் ‘எமிஸ்’ என்னும் கல்வி மேலாண்மை டிஜிட்டல் முறை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் மாணவ-மாணவிகள் வருகை பதிவேடு, ஆசிரியர்களின் வருகை பதிவேடு ஆன்லைனில் பராமரிக்கப்பட உள்ளது. எமிஸ் அடிப்படையில்தான் மாணவ-மாணவிகளுக்கான நலத்திட்டங்கள் (கல்வி உதவித்தொகை உள்பட) வழங்கப்படும். ஆசிரியர்களுக்கான முழு விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள், பதவி உயர்வு, இடமாறுதல், இதுவரை பணியாற்றிய பள்ளிகள், பள்ளிக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் பராமரிக்கப்படும். இவற்றை எப்படி பராமரிக்க வேண்டும் என பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ‘எமிஸ்’ இணையத்தில் அந்தந்த பள்ளியின் ஆசிரியர்கள் சரியான தகவல்களை பதிவு செய்திட வேண்டும். இந்த டிஜிட்டல் முறை திட்டத்தில் மாணவர்களின் திறன் உள்ளிட்டவையும் அளிக்கப்படும்.

அடையாள அட்டை

இந்த திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவருக்கும் 16 இலக்க ‘எமிஸ்’ அடையாள அட்டை(ஸ்மார்ட் கார்டு) வழங்கப்பட உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து தலைமை ஆசிரியர்களுக்கு சார்லஸ், பாண்டி ஆகிய 2 அலுவலர்கள் எமிஸ் திட்டம் குறித்து பயிற்சி அளித்தனர். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்(திருச்சி) சின்னராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் தமிழ்ச்செல்வன் (திருச்சி மேற்கு), ஜெயராமன் (திருவெறும்பூர்), ஜெகநாதன், சைமன் பீட்டர்(அந்த நல்லூர்), ஜெயலட்சுமி(திருச்சி நகரம்) மற்றும் 4 வட்டார தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 

Next Story