தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ள ஐகோர்ட்டு அனுமதி


தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ள ஐகோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 10:54 PM GMT)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக நடத்தப்படும் நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 500–ஆக உயர்த்த அனுமதி வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

 தூத்துக்குடியில் கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் உயிரிழந்த கிளாஸ்டன், தமிழரசன், கார்த்திக், ரஞ்சித், ஜெயராமன் ஆகியோரது குடும்பத்தினர் சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது.

இதுதொடர்பாக கிளாஸ்டனின் சகோதரி ஜான்ரோஸ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘‘துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஓராண்டாகியும் அதன் வலியும், வேதனையும் இன்னும் எங்கள் நெஞ்சங்களில் இருந்து அகலவில்லை. இதனால் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பில் வருகிற 22–ந்தேதி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் இருந்து எஸ்.ஏ.வி. பள்ளி மைதானம் வரை பேரணி நடத்த அல்லது வி.இ.ரோடு அந்தோணியார் கோவில் திருமண மண்டபத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதேபோல் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடியில், பாளையங்கோட்டை சாலையில் மையவாடி பஸ் நிறுத்தம் எதிரில் அல்லது எட்டயபுரம் சாலை கலைஞர் அரங்கில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்த 13 பேருக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘‘22–ந்தேதி பெல் ஓட்டலில் காலை 9 மணி முதல் 11 மணி வரை நடக்கும் நினைவஞ்சலி கூட்டத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம்’’ என்று அனுமதி வழங்கினர்.

மேலும், நிகழ்ச்சி முழுவதையும் மனுதாரர் மற்றும் காவல்துறை ஆகிய இருதரப்பும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், நிகழ்ச்சியில் கலந்துகொள்வோரின் பட்டியலை கூட்டம் முடிந்த பின்னர், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் விதித்து வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story