பழனியில், பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு


பழனியில், பள்ளி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2019 4:29 AM IST (Updated: 16 May 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

பழனியில், பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பழனி,

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 20-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளி வேன், பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். அவ்வாறு மாணவர்களை ஏற்றி செல்லும் பள்ளி வாகனங்கள் ஆண்டுதோறும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் வாகனத்தில் உள்ள பாதுகாப்பு வசதிகள், வேக கட்டுப்பாட்டு கருவி போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

அந்தவகையில் பழனி பகுதியில் உள்ள பள்ளிகளில் இயக்கப்படும் வேன், பஸ் போன்ற வாகனங்களை ஆய்வு செய்யும் முதற்கட்ட முகாம் பழனியில் நேற்று நடந்தது. நகராட்சி பள்ளி மைதானத்தில் நடந்த ஆய்வில், தாசில்தார் பழனிச்சாமி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் கருப்புச்சாமி, வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வி ஆகியோர் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள், இருக்கைகள் மாணவர்களுக்கு வசதியாக உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். மேலும் முதலுதவி பெட்டி மற்றும் தீயணைப்பு கருவிகள், விபத்து ஏற்பட்டால் மாணவர்கள் வெளியேறுவதற்கான அவசரவழி ஏற்படுத்தப்பட்டுள்ளதா? என்று பார்வையிட்டனர். தொடர்ந்து பள்ளி வேன், பஸ்களை இயக்கும் டிரைவர்களின் தகுதி, ஓட்டுனர் உரிமம் ஆகியவை சரிபார்க்கப்பட்டன. இந்த சோதனையில் தகுதியான வாகனங்களுக்கு மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பழனி பகுதியில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களுக்கான முதற்கட்ட ஆய்வு நேற்று நடந்தது. பழனி பகுதியில் இயக்கப்படும் 125 வாகனங்களில், 75 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டது. வருகிற 30-ந்தேதிக்குள் பஸ், வேன் உள்பட அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படும். இதில் பாதுகாப்பு மற்றும் தகுதியுள்ள வாகனங்கள் மட்டுமே பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதிக்கப்படும்’ என்றனர்.

Next Story