கோடை வெயிலால் பாதிக்காத வகையில் மான், மயில், மலைப்பாம்புகள் பராமரிப்பு


கோடை வெயிலால் பாதிக்காத வகையில் மான், மயில், மலைப்பாம்புகள் பராமரிப்பு
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 11:12 PM GMT)

வனத்துறை வளாகத்தில் பராமரிக்கப்படும் மான், மயில்கள், மலைப்பாம்புகள் ஆகியவை தகிக்கும் கோடை வெயிலால் பாதிக்காத வகையில் அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து பாதுகாத்து வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. மதிய வேளையில் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது. மலை மற்றும் வனப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டதாலும், அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இல்லாமல் போனதாலும் தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் நகர் பகுதிக்கு தப்பி வந்து விடுகின்றன.

இப்படி வந்த மான்கள், மயில்கள், மலைப்பாம்புகள், பாம்புகள், மற்றும் பறவைகள் பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் பிடித்து வரப்பட்டு வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட காலத்துக்குப்பின் இவை மீண்டும் வனப்பகுதிக்கு கொண்டு போய் விடப்படுகின்றன.

இந்த வகையில் தற்போது புதுவை கடலூர் சாலையில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டில் 11 மலைப்பாம்புகள், 11 மயில்கள், 14 மான்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மலைப்பாம்பு ஒன்று 13 அடி நீளத்தில் சுமார் 35 கிலோ எடை கொண்டதாக உள்ளது. கோடை வெயிலால் பாதிக்கப்படாமல் இருக்க இவற்றை பாதுகாப்பதில் வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் பாம்புகள் தானாகவே செத்துவிடும். எனவே அவற்றை பாதுகாக்க பாம்புகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளை சுற்றி தண்ணீர் ஊற்றி குளிர்விக்கப்படுகிறது. மேலும் பாம்புகள் மீதும் தண்ணீரை வனத்துறை ஊழியர்கள் பீய்ச்சி அடித்து பராமரித்து வருகின்றனர்.

இங்குள்ள மலைப்பாம்புகளுக்கு இரையாக கோழி, காடை போன்றவை உணவாக வழங்கப்படுகிறது. சாதாரண பாம்புகளுக்கு எலி உள்ளிட்டவை இரையாக போடப்படுகிறது. பாம்புகளுக்குள் மோதல் ஏற்படுவதை தவிர்க்க தனித்தனியாக உணவு வழங்கப்படுகிறது. இதில் மலைப்பாம்புகள் ஒரு முறை உணவு எடுத்துக் கொண்டால் 10 முதல் 15 நாட்கள் வரை தாக்குப்பிடிக்க கூடியவை ஆகும்.

மான், மயில் போன்றவற்றுக்கு வெயிலுக்கு இதமாக உடலை குளிர்ச்சியூட்டும் வகையில் உணவுகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கு தர்பூசணி, கிர்ணிப்பழம், வெள்ளரிப்பழம் போன்றவற்றை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.

Next Story