முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு


முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி தேர்தல் பிரசாரத்தில் குமாரசாமி பேச்சால் காங்கிரசில் சலசலப்பு
x
தினத்தந்தி 15 May 2019 11:58 PM GMT (Updated: 15 May 2019 11:58 PM GMT)

முதல்-மந்திரி பதவி வழங்காமல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறிய கருத்தால் காங்கிரசில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. குமாரசாமி முதல்-மந்திரியாக உள்ளார். சமீபகாலமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ள சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.

இது குமாரசாமிக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் இந்த பேச்சால் தேவேகவுடா மற்றும் குமாரசாமி கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்காமல் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி பேசியிருக்கிறார். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் பேசி வரும் நிலையில் குமாரசாமியின் இந்த பேச்சு காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள குந்துகோல், சிஞ்சோலி ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி சிஞ்சோலியில் காங்கிரஸ் வேட்பாளர் சுபாஷ் ராத்தோட்டை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நீண்ட காலத்திற்கு முன்பே மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்கியிருக்க வேண்டும். அவருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன். அவர் மேற்கொண்ட பணிகளுக்கு காங்கிரசில் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Next Story