சிறுமியை கடத்தி திருமணம்: வழக்கை மறந்து குடும்பம் நடத்தி வந்தவர் கைது 34 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை


சிறுமியை கடத்தி திருமணம்: வழக்கை மறந்து குடும்பம் நடத்தி வந்தவர் கைது 34 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 16 May 2019 6:03 AM IST (Updated: 16 May 2019 6:03 AM IST)
t-max-icont-min-icon

கடத்திய சிறுமியை திருமணம் செய்து கொண்டு, வழக்கை மறந்து குடும்பம் நடத்தி வந்தவரை போலீசார் 34 வருடங்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர்.

மும்பை,

மும்பை மலாடு மேற்கு பகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு மைனா என்ற 17 வயது சிறுமியை கடத்தியதாக அவளது தாய் பாப்ளி கொடுத்த புகாரின் பேரில் ராஜூ சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அப்போது அவருக்கு வயது 25. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்னர் அவர் தலைமறைவாகி விட்டார்.

போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர் கடந்த 34 வருடங்களாக போலீசில் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் குரார் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

விசாரணையின் போது, ராஜூ சவுத்ரி ஜாமீனில் வெளியே வந்த பின்னர், தான் கடத்திய மைனாவையே திருமணம் செய்து கொண்டார். அதுபற்றி பாப்ளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் ராஜூ சவுத்ரி, மைனா இருவரும் பால்கர் மாவட்டத்தில் உள்ள விக்ரம்காட் கிராமத்தில் குடியேறி வசித்து வந்தது தெரியவந்தது.

மைனாவை திருமணம் செய்த பின்னர் அந்த வழக்கையே தான் மறந்து விட்டதாக ராஜூ சவுத்ரி கூறினார். தற்போது அவருக்கு 59 வயதாகிறது. அவரது மனைவி மைனாவுக்கு 51 வயதாகிறது. அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதையடுத்து போலீசார் ராஜூ சவுத்திரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.

Next Story