கொசஸ்தலை ஆற்றில் மணல் சரிந்து மாற்றுத்திறனாளி பலி : 3 பேர் படுகாயம்


கொசஸ்தலை ஆற்றில் மணல் சரிந்து மாற்றுத்திறனாளி பலி : 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 10:26 AM GMT)

அரக்கோணம் அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் சரிந்து மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தார்.

அரக்கோணம், 

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் சிலர் மணல் கடத்தி செல்கின்றனர். மாட்டு வண்டி, மினிவேன், டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது.

 வருவாய்த்துறையினர், போலீசார் மணல் திருட்டை தடுக்க கூடுதல் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்து மணல் திருடி செல்லும் வாகனங்களை பிடித்து வருகின்றனர். கோணிப்பைகளில் மணலை அள்ளி ஆற்றுப்பகுதியில் வைத்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்று 5 மூட்டைகள் வீதம் கடத்தி செல்கின்றனர். ஆற்றுப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டி அதில் இருந்து மணலை எடுத்து ஆற்றிலே மறைவான பகுதியில் குவித்து வைத்து விட்டு இரவு நேரங்களில் டிராக்டர், லாரிகளில் குவித்து வைத்த மணலை எடுத்து செல்கின்றனர். மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் பள்ளம் தோண்டி மணல் எடுக்கும் போது சில நேரங்களில் மணல் சரிந்து பள்ளங்களில் சிக்கி கொள்ளும் நிலை இருந்து வருகிறது. அவ்வாறு ஒரு சம்பவம் நேற்று அரக்கோணம் அருகே நடந்தது.

இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

அரக்கோணம் அருகே வளர்புரம் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் நேற்று காலை 4 பேர் பள்ளத்தில் இருந்து மணலை எடுத்து குவித்து வைத்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென பள்ளத்தின் மேற்பரப்பில் இருந்த மணல் சரிந்து விழுந்து 4 பேருளும் மணலில் உயிரோடு புதைந்தனர். இதில் 3 பேர் சுதாரித்து கொண்டு படுகாயத்துடன் மூச்சுத்திணறி வெளியே வந்தனர்.

பின்னர் 3 பேரும் சேர்ந்து தன்னுடன் மணல் அள்ளி கொண்டிருந்த தொழிலாளியை மணலில் இருந்து மீட்டனர். ஆனால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்–இன்ஸ்பெக்டர் ரபேல்லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த 3 பேர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்தவர் வளர்புரம் காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் தங்கவேல் (வயது 25) வாய்பேச முடியாத மாற்றுதிறனாளி என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story