நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி : கொலை வழக்காக மாற்றம் - 3 பேர் கைது


நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பலி : கொலை வழக்காக மாற்றம் - 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 4:00 AM IST (Updated: 16 May 2019 4:56 PM IST)
t-max-icont-min-icon

தானிப்பாடி அருகே நிலத்தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தண்டராம்பட்டு, 

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன்கள் பிச்சாண்டி (வயது 30), பன்னீர் (28). கடந்த 12–ந் தேதி நிலத்தகராறு காரணமாக அதே ஊரை சேர்ந்த உறவினர்களான ராமன், சேட்டு ஆகியோர் தரப்பால் குப்பன் தாக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பிச்சாண்டி, பன்னீர் ஆகியோர் கடந்த 14–ந் தேதி சேட்டு தரப்பினரிடம் தட்டிக் கேட்டனர். அப்போது ஆத்திரம் அடைந்த சேட்டுவின் மகன் சங்கர் (28), சின்னகண்ணு என்பவரின் மகன் கோவிந்தன் (30) பெருமாள் என்பவரின் மகன் வெங்கடாசலம் (30) ஆகியோர் சேர்ந்து பயங்கரஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிச்சாண்டி மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பன்னீர் கொடுத்த புகாரின் பேரில் தானிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிச்சாண்டி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றம் செய்தனர். அதைத்தொடர்ந்து பிச்சாண்டியை தாக்கிய சங்கர், கோவிந்தன், வெங்கடாசலம் ஆகிய பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story