ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் போராட்டக்களமாக மாறும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் போராட்டக்களமாக மாறும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 16 May 2019 11:15 PM GMT (Updated: 16 May 2019 3:09 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தமிழகம் போராட்டக்களமாக மாறும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே இருள் நீக்கி கிராமத்தில் நிலம் கொடா இயக்கத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் செந்தில்குமார், கோட்டூர் வடக்கு ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் ராவணன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் பாலமுருகன், கோட்டூர் கனகராஜ், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தை அழிக்க மோடி அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. நியூட்ரினோ திட்டம் மூலம் மழை பொழிவை தரும் மேற்கு தொடர்ச்சி மலையை அழிக்க துடிக்கிறது.


காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழக நலனுக்கு எதிராக செயல்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் காரைக்கால், நாகப்பட்டினம் கோடியக்காடு வரை சுமார் 50 லட்சம் ஏக்கர் விளை நிலங்களிலும், அதனை ஒட்டிய வங்கக் கடல் பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்யாவிட்டால் ஒட்டு மொத்த தமிழகமும் போராட்டக்களமாக மாறும்.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story