மாவட்ட செய்திகள்

கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை + "||" + 80% of the cows sold in Erode Karungal palayam market

கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 80 சதவீத மாடுகள் விற்பனை ஆனது.

ஈரோடு, 

ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 150 கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த கன்றுக்குட்டிகள் ஒன்று ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனை ஆனது.

நேற்று வழக்கமான சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல் மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர். 300 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன.

இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.18 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.34 ஆயிரத்துக்கும் விற்பனையானது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.16 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.33 ஆயிரத்துக்கும் விற்பனையானது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கோவா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வந்த வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வேன் மற்றும் லாரிகளில் ஏற்றிச்சென்றனர்.

இதுகுறித்து சந்தை மேலாளர் முருகன் கூறும்போது, ‘கருங்கல்பாளையம் சந்தையில் வழக்கமாக 90 சதவீதத்திற்கு மேல் மாடுகள் விற்பனை ஆகும். ஆனால் தற்போது மாடுகள் வாங்க அரசு மானியம் வழங்காததால் விற்பனை குறைந்து உள்ளது. இதனால் 80 சதவீத மாடுகள் மட்டுமே விற்பனை ஆனது’ என்றார்.


அதிகம் வாசிக்கப்பட்டவை