நாமக்கல் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணி 60 சதவீதம் நிறைவு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது


நாமக்கல் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணி 60 சதவீதம் நிறைவு டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 4:11 PM GMT)

நாமக்கல் நகராட்சியில் புதிய குடிநீர் திட்டப்பணி 60 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாகவும், வருகிற டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ஆணையாளர் சுதா கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் நகராட்சியினை ஒட்டி அமைந்துள்ள சின்ன முதலைப்பட்டி, முதலைப்பட்டி, கொசவம்பட்டி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு, தற்போது 39 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. எனவே ஏற்கனவே உள்ள குடிநீர் திட்டங்களின் மூலம் பொதுமக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கிட முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

இதையொட்டி நகராட்சி பொதுமக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றிட ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து நாமக்கல்லுக்கு ரூ.185 கோடியே 24 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் உருவாக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

இதற்காக ஜேடர்பாளையம் காவிரி ஆற்று அணைக்கட்டு பகுதியில் நீர் சேகரிப்பு கிணறு அமைத்து, சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கபிலகுறிச்சியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதிலிருந்து நீர் உந்து குழாய்கள் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சியில் உள்ள 9.15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் அதில் இருந்து நீர் உந்து குழாய்கள் மூலம் நாமக்கல் நகராட்சியில் புதிதாக 9 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து, குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பணி தொடக்கம் முதலே விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சுதா கூறியதாவது:-

புதிய குடிநீர் திட்டப்பணி சுமார் 60 சதவீதம் முடிக்கப்பட்டு உள்ளது. இப்பணி வருகிற டிசம்பர் மாதம் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும். இந்த திட்டம் நிறைவு பெற்றவுடன், நாமக்கல் நகராட்சியில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாள் ஒன்றுக்கு, நபர் ஒருவருக்கு சுமார் 135 லிட்டர் காவிரி குடிநீர் கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story