நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது


நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம் தொடங்கியது
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 5:27 PM GMT)

நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது.

நெல்லை, 

தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பட்டப்படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று தொடங்கியது. பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் விண்ணப்பங்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. விண்ணப்பங்கள் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை கொடுக்கப்பட்டன. முதல் நாளான நேற்று சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பெற்றோருடன் வந்து இருந்தனர். அவர்கள் வரிசையில் நின்று விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர்.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ரூ.250 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முதல் நாளான நேற்று 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன. ஒரு சில மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் விண்ணப்பங்கள் கொடுக்கப்படுகின்றன. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் கொடுக்க வருகிற 31-ந் தேதி கடைசி நாளாகும். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

Next Story