செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்த கும்பலை பிடிக்க முயற்சி: போலீஸ் துப்பாக்கி சூட்டில் பஞ்சாப்பை சேர்ந்தவர் பலி


செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்த கும்பலை பிடிக்க முயற்சி: போலீஸ் துப்பாக்கி சூட்டில் பஞ்சாப்பை சேர்ந்தவர் பலி
x
தினத்தந்தி 17 May 2019 3:45 AM IST (Updated: 16 May 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்த கும்பலை பிடிக்கும் முயற்சியின் போது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் பஞ்சாப்பை சேர்ந்தவர் பலியானார். தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மைசூரு,

மைசூரு டவுன் விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் செல்லாத ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் மாற்றி கொடுப்பதாக விஜயநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் நேற்று காலை விஜயநகர் பகுதியில் குறிப்பிட்ட முகவரியில் உள்ள வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 4 பேர் கும்பல் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் 4 பேரும் சேர்ந்து ஆயுதங்களால் போலீசாரை தாக்கினர். இதில் 2 போலீஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் 4 பேரையும் சரண் அடையும்படி போலீசார் எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பிடிக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுபற்றி அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி சூட்டில் பலியானவரின் உடலை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் காயம் அடைந்த போலீசாரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவரும், தப்பி ஓடியவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் 4 பேரும் விஜயநகர் பகுதியில் தங்கி இருந்து செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரின் பெயரை கூற போலீசார் மறுத்து விட்டனர்.

இதுகுறித்து விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story