மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம், தங்கையை பெண் கேட்டு தொந்தரவு செய்ததால் கொன்றேன் - கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்


மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம், தங்கையை பெண் கேட்டு தொந்தரவு செய்ததால் கொன்றேன் - கைதான நண்பர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 May 2019 4:00 AM IST (Updated: 16 May 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்கையை பெண் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக அவரது நண்பர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

மேல்மலையனூர்,

மேல்மலையனூரை அடுத்த நந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். முன்னாள் ராணுவவீரர். இவருடைய மகன் கமல் என்கிற கமலக்கண்ணன்(வயது 27). மாற்றுத்திறனாளி. இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு தனது குடும்பத்தினரிடம் நண்பர் ஒருவரை பார்த்து விட்டு வருவதாக கூறிச்சென்ற கமல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கமலை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.

இதனிடையே கிழவம்பூண்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரத்தில் கமல் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தவர் யார்?, எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது மர்மமாக இருந்தது. இது தொடர்பாக அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கமலை கொலை செய்த நபரை பிடிக்க சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, அவலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தனிப்பிரிவு ஏட்டு ராமலிங்கம் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கமலின் நண்பரான மேல்நெமிலி கிராமத்தை சேர்ந்த விநாயகம்(22) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து விநாயகத்தை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதில் கமலை கொலை செய்ததை விநாயகம் ஒப்புக்கொண்டார். அவரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விநாயகம் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

நான் மேல்செவலாம்பாடியில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறேன். அங்கு கமல் அவரது இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க கொண்டு வருவார். அப்போது எனக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். கமல் அவ்வப்போது எனக்கு பண உதவி செய்து வந்தார்.

இந்த நிலையில் எனது தங்கையும், கமலும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ள னர். எனது தங்கையை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கமல் எனது பெற்றோரிடம் தொந்தரவு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் கமல், மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எனது தங்கையை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க எனக்கு விருப்பம் இல்லை.
இதனால் எனது தங்கையை கோயம்புத்தூருக்கு அனுப்பிவிட்டு அவனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி கமலிடம் செல்போனில்பேசி கிழவம்பூண்டி பஸ் நிறுத்தத்திற்கு வரவழைத்தேன். அங்கு கமல் இருசக்கர வாகனத்தில் வந்தார்.

அவரிடம் நான் எனது தங்கையை மறந்துவிடுமாறு கூறினேன். ஆனால் கமல் உனது பெற்றோரே எனக்கு பெண் தருவதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். நண்பனான நீ ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறாய் என்றார். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கமலின் கழுத்து, வயிறு என 12 இடங்களில் குத்தினேன். இதில் ரத்தவெள்ளத்தில் கமல் கீழே சாய்ந்தான். ஆனாலும் எனக்கு ஆத்திரம் அடங்கவில்லை. அருகில் கிடந்த கல்லை எடுத்து அவனது தலையில் போட்டு விட்டு நான் அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் சென்று விட்டேன். ஆனால் போலீசார் எப்படியோ மோப்பம் பிடித்து என்னை கைது செய்துவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து விநாயகத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தங்கையை காதலித்த மாற்றுத்திறனாளியை அவரது நண்பரே கொலை செய்தது மேல்மலையனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story