கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு இணைபிரியா தம்பதியின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்


கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு இணைபிரியா தம்பதியின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம்
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 6:37 PM GMT)

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக இறந்தார். சாவிலும் இணைபிரியா இந்த தம்பதியின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு அய்ரக்கண்ணி தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன்(வயது 74). இவர் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி(65). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி, நாராயணசாமி, சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரா, புனிதா என்ற மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

சுப்பிரமணியன்-ராஜேஸ்வரி தம்பதியினர், திருமணமானதில் இருந்தே இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கும், எங்கு சென்றாலும் இருவரும் இணைபிரியாமல் சென்று வந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த சுப்பிரமணியன், மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுப்பிரமணியன் இறந்தார். இந்த தகவலை தெரிவித்தால் ராஜேஸ்வரி தாங்கமாட்டாரே என்ன செய்வது என்று கருதிய அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சுப்பிரமணியன் இறந்த தகவலை ராஜேஸ்வரியிடம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் அவரது இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதனால் அவரது வீடு உறவினர்கள் புடைசூழ பரபரப்பாக காணப்பட்டது.

அப்போதுதான் தனது கணவர் இறந்த தகவல் ராஜேஸ்வரிக்கு தெரிய வந்தது. இந்த தகவலை கேட்டதும் ராஜேஸ்வரி அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ராஜேஸ்வரி உடலையும் வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் அருகருகே வைத்தனர். கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தது.

சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் உடல்களுக்கு உறவினர்கள், கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து இருவருடைய உடல்களும் அங்குள்ள மயானத்தில் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.

Next Story