மு.க.ஸ்டாலினுக்கு மறுஓட்டுப்பதிவு மூலம் வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேச்சு


மு.க.ஸ்டாலினுக்கு மறுஓட்டுப்பதிவு மூலம் வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 6:46 PM GMT)

டாக்டர் ராமதாசை தரக்குறைவாக பேசிய மு.க.ஸ்டாலினுக்கு 8 வாக்குச்சாவடிகளில் நடைபெறும் மறுஓட்டுப்பதிவு மூலம் வாக்காளர்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என்று பிரசார கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி நடைபெற்றது. இந்த நிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த நிலையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் டி.அய்யம்பட்டி, ஜாலிப்புதூர், நத்தமேடு ஆகிய இடங்களில் நேற்று இரவு அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த பிரசார கூட்டங்களில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் 60-ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 8 வாக்குச்சாவடிகளுக்கு மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது. இதற்கு முழுமுதல் காரணம் தி.மு.க. தான். பா.ம.க.வின் கோட்டையான இந்த பகுதியில் ஒரு ஓட்டுகூட வேறு யாருக்கும் செல்லாது என்பதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக தி.மு.க. பொய்யான பிரசாரங்களை செய்து மறுவாக்குப்பதிவு நடத்தும் நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த பகுதியில் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் புகார் அளிக்கவில்லை. தி.மு.க.வை சேர்ந்த முகவர்கள் கூட புகார் அளிக்கவில்லை. அப்போது இந்த பகுதியை சேர்ந்த மக்கள் மீது நம்பிக்கை இல்லையா?

இந்தியாவின் மூத்த தலைவர் என்று டாக்டர் ராமதாசை பிரதமர் மோடி பாராட்டுகிறார். 40 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு, கல்விக்கான வாய்ப்பு ஆகியவற்றிற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் டாக்டர் ராமதாஸ். அவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது தரக்குறைவாக விமர்சித்து பேசினார். ஏற்கனவே இந்த வாக்குச்சாவடிகளில் 89 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. தற்போது நடக்கும் மறுஓட்டுப்பதிவில் 100 சதவீத ஓட்டுக்களையும் பதிவு செய்து அதன்மூலம் மு.க. ஸ்டாலினுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை கொண்டு வரும் திட்டத்தை எவ்வளவு செலவானாலும் செயல்படுத்துவோம் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்து உள்ளார். எனவே நீர்மேலாண்மை திட்டங்கள் உள்பட தர்மபுரி மாவட்டத்தின் அனைத்து திட்டங்களையும் அமைச்சர் கே.பி.அன்பழகனும், நானும் இணைந்து செயல்படுத்துவோம். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஆய்வின்படி தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நானும், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமியும் வெற்றி பெற போகிறோம் என்பது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story