வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் - வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
வால்பாறை மலைப்பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை,
வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து அட்டகட்டி வரையில் உள்ள சாலைகளில் வரையாடுகளும், பல்வேறு வகையான குரங்குகளும் நடமாடி வருகின்றன.
அட்டகட்டி பகுதியில் இருந்து வால்பாறை நகர் பகுதி எல்லை வரை மான்கள், காட்டெருமைகள், கிளையாடுகள், சிறுத்தைப்புலிகள், காட்டுப்பூனைகள், மரநாய்கள், சாலையை கடந்து செல்கின்றன. அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை காமராஜ்நகர் பகுதி வரை அரிய வகை சிங்கவால் குரங்குகள் சாலையை கடக்கின்றன.
இவ்வாறு பல்வேறு வனவிலங்குகள் சாலையை கடந்து செல்கின்றன. இவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கிறார்கள். ஒரு சிலர் அவற்றை துன்புறுத்தும் செயலிலும் ஈடுபடுகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வால்பாறை பகுதியில் சிறிய அளவிலான வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்களில் சிக்கி இறக்க நேரிடுகிறது. இதனால் அறியவகை விலங்கினங்களின் இனப்பெருக்கம் குறைந்துவிடுகிறது. அதே சமயம் வால்பாறை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் இருந்து புதுத்தோட்டம் எஸ்டேட், கருமலை எஸ்டேட், பழைய வால்பாறை எஸ்டேட், பன்னிமேடு எஸ்டேட், குரங்குமுடி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் அதிகளவில் காட்டெருமைகள் சுற்றித்திரிகின்றன.
குறிப்பாக ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் இருந்து புதுத்தோட்டம் வரை உள்ள இடங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் அதிகளவில் காட்டெருமைகள் சாலையை கடந்து செல்கின்றன. இவ்வாறு பெரிய அளவிலான வனவிலங்குகள் சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இல்லை என்றால் விலங்குகள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்.
வால்பாறைக்கு இருசக்கர வாகனங்களில் சுற்றுலா வருபவர்கள் காட்டெருமைகள் சாலையை கடப்பதை பார்த்து உடனடியாக வாகனத்தை திடீர் என்று நிறுத்தும் போது விபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். எனவே வால்பாறை பி.ஏ.பி. காலனி வரை உள்ள சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும். இதேபோல் எஸ்டேட் பகுதி சாலைகளில் செல்லும் போதும் கவனமாக செல்லவேண்டும் என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story