குன்னூர் பகுதியில் பலத்த மழை, மரங்கள் விழுந்ததில் 5 வாகனங்கள் சேதம்
குன்னூரில் பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் 5 வாகனங்கள் சேதம் அடைந்தன.
குன்னூர்,
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக சரிவர மழை பெய்யவில்லை. இதனால் குன்னூர் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த வாரத்தில் மழை பெய்தாலும் அது பலத்த மழையாக இல்லாமல் சாரல் மழையாகவே இருந்தது.
நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இடி, மின்னலுடன் பெய்த இந்த மழை ஆலங்கட்டி மழையாக பெய்தது. சுமார் 1½ மணி நேரம் மழை பெய்தது. இதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு மீண்டும் பெய்ய தொடங்கிய மழை பலத்த மழையாக உருவெடுத்தது.
குன்னூர் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது. இதில் 3 வாகனங்கள் சேதம் அடைந்தன. ராட்சத மரம் விழுந்த சமயத்தில் அந்த வாகனங்களில் ஆட்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.
இதேபோல் குன்னூர் டி.டி.கே. சாலையில் சென்று கொண்டிருந்த 2 வாகனங்கள் மீது ராட்சத மரம் விழுந்தது. இதில் ஒரு சரக்கு வாகனத்தின் முன்பகுதி மீது மரக்கிளைகள் விழுந்ததால் டிரைவரால் கதவை திறந்து வெளியே வர முடியவில்லை.
இதுகுறித்து குன்னூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரக்கு வாகனத்தின் மீது விழுந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றி டிரைவரை மீட்டனர்.
Related Tags :
Next Story