மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து, மனைவியை கொலை செய்ய முயன்ற தொழிலாளி கைது
சேரம்பாடி அருகே மனைவி மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பந்தலூர்,
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் டிட்டோ குமார் (வயது 40), கூலிதொழிலாளி. இவரது மனைவி ஷோபனா (36). டிட்டோ குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி இரவு 7 மணிக்கு மது குடிப்பதற்காக மனைவியிடம் டிட்டோ குமார் பணம் கேட்டார். ஆனால் ஷோபனா பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த டிட்டோ குமார் ஷோபனாவிடம் தகராறு செய்தார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில், ஆத்திரம் அடைந்த டிட்டோ குமார் வீட்டில் வைத்து இருந்த மண்எண்ணெயை எடுத்து ஷோபனா மீது ஊற்றினார். தொடர்ந்து தீயை பற்ற வைத்தார். அப்போது வலி தாங்காமல் ஷோபனா அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஷோபனாவை மீட்டனர். பின்னர் கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், ஏட்டு சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயன்ற டிட்டோ குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story