அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? கமல்ஹாசன் கேள்வி


அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? கமல்ஹாசன் கேள்வி
x
தினத்தந்தி 16 May 2019 11:15 PM GMT (Updated: 16 May 2019 7:32 PM GMT)

அரவக்குறிச்சி தொகுதியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது. இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா? என கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.

க.பரமத்தி,

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந் தேதி பள்ளப்பட்டியில் பேசினார். அப்போது அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை பற்றி பேசினார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 13-ந் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், அதற்கு அடுத்து தொடர்ந்து பிரசாரம் செய்ய இருந்ததை அவர் ரத்து செய்தார்.

இதற்கிடையில் கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரத்து செய்த தேர்தல் பிரசாரத்தை கமல்ஹாசன் நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கினார். திருப்பரங்குன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து அவர் பேசினார். தொடர்ந்து நேற்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து தென்னிலை, தொப்பம்பட்டி, நொய்யல் ஆகிய இடங்களில் கமல்ஹாசன் திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நம் வாழ்வில் முக்கிய தேவை என்று சொல்லப்படும் குடிநீர் எல்லா ஊர்களிலும் தாய்மார்கள் 2 நாள், 3 நாள், 8 நாள் வரை என காத்திருப்பது உண்டு. இங்கு காத்திருக்கும் நாள் குறைந்து விட்டது. என்பதால் நாம் அதிர்ஷ்டம் நிறைந்தவர்கள் என நீங்கள் நினைத்து விடக்கூடாது. இது உங்கள் உரிமை. அவை கொடுக்க வேண்டியது அவர்களது கடமை. கடமை தவறியவர்கள் இருவர். ஒரு அரசாங்கம் மட்டுமில்லை. ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களும் தொடர்ந்து உங்களை கவனிக்காமல் விட்டதால் தான் என்னை போன்றவர்கள் எல்லாம் அரசியலில் குதித்தார்கள். நான் வருத்தமாக சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். முதலில் வரும் போது கோபமாக வந்தேன். இப்போது மக்களின் மத்தியில் நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.

உங்களுக்காக (மக்கள்) நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதை விட்டுவிட்டு உங்களுக்கும், நாட்டு நலனுக்கும் எதிராக உள்ள எதிரிகளை பற்றி விமர்சித்து கொண்டிருப்பதை விட, நாம் செய்ய வேண்டியது என்ன? நாம் செய்யப்போறது என்ன? என்பதை பற்றி பட்டியலிடலாம். செய்யாமல் விட்டு விட்டது பட்டியலாக நீண்டு விட்டதால் தமிழகம் பின்தங்கி விட்டது என்பது என் கருத்து மட்டுமல்ல, பொது கருத்து.

மக்கள் நீதி மய்யத்தின் மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று உங்கள் வீடு தேடி குடிநீர் சேர்க்க முடியும் என்பது தான். இது செய்யக்கூடிய ஒன்று. அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் நீர் நிலை அறிஞர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பு இருந்தவர்களுக்கு செய்ய தெரியாதா? நீங்கள் புதிதாக வந்து பேசுகிறீர்களே? என்கின்றனர்.

நாங்கள் பேசுவது மக்களுக்கு நீரை எப்படி கொண்டு வீட்டில் சேர்ப்பது என்பது மட்டும் தான். எங்களுக்கு எவ்வளவு ‘பெர்சன்டேஜ்’ என நாங்கள் கேட்க போவதில்லை. அப்படி கேட்டால் எல்லா வேலைகளும் நாசமாகி போய்விடும். அப்படி தான் தமிழகம் கொஞ்சம்... கொஞ்சமாக நாசமாகி கொண்டிருக்கிறது. அதில் இருந்து நாம் மீள வேண்டும். நான் மீட்டெடுப்பேன் என்று சொல்வது அகந்தையாகும். நாம் மீள வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும். முக்கியமாக அற்புதமான அரசியல் புரட்சியின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இது ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தயவு செய்து நேர்மையாக வாக்களியுங்கள். அப்படி செய்தால் மாற்றம் உங்களை வந்தடையும்.

இப்போது நான் பேசும் செய்ய முடியும் என்ற உண்மைக்கு யாரும் தடை போட முடியாது. எதிர்ப்பு சொல்ல முடியாது. எல்லா உண்மைகளுக்கும் தடை போட்டு விட முடியாது. இந்த உண்மை நடக்க கூடிய விஷயம். தண்ணீர் உங்களை வந்தடையும். இத்தனை ஆண்டுகள் நாம் செயல்படாமல் இருந்து விட்டோம். நாம் செயல்படாததால் அரசும் செயல்படாமல் இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். நல்ல அரசை கொண்டு வாருங்கள். நேர்மையாக நாம் இருந்தால் அரசும் நேர்மையாக இருப்பதை தவிர வேறு வழியில்லாமல் போய்விடும்.

கவலையை மறப்பதற்காக தான் தூக்கம். நீங்கள் நிம்மதியாக தூங்குகிறீர்களா? என்பது தான் எனது கேள்வி. உங்கள் கவலையை மறப்பதற்காக, தூக்கம் வருவதற்காக அரசாங்கம் கடைகளை (டாஸ்மாக்) திறந்து வைத்து மருந்தாக விற்று வருகிறது. அந்த மருந்து தான் உங்களுக்கு பயன்பட்டு வருகிறது. அது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தாது. அரசுகள் செய்யாத திட்டங்களை நாங்கள் பட்டியலிட்டு செய்கிறோம் என்கிறோம்.

எங்களிடம் பணம் இல்லை. இங்கு வந்திருக்கிற கூட்டம் பணம் வாங்காமல் வந்துள்ளது. ஆனால் இதே அரவக்குறிச்சியில் பணப்பட்டுவாடா தொடங்கி விட்டது எல்லோருக்கும் தெரியும். தேர்தல் ஆணையத்திற்கு தெரியுமா? தெரியாதா? என தெரியவில்லை. தெரியப்படுத்துங்கள் கண்டுகொள்கிறார்களா? என்று பார்ப்போம். இப்படியே விட்டுவிட்டால் நாடு எப்படி நாம் நினைத்தப்படி முன்னேறும்.

வாக்குகளை விற்றால் உங்களது வாழ்க்கையை 5 வருடத்திற்கு நீங்கள் குத்தகைக்கு விட்டுவிடுவதில்லை அடகு வைத்துவிடுகிறீர்கள். திரும்பி வருமா? என்பது தெரியாது. தயவு செய்து நீங்கள் அதை செய்யாதீர்கள். ஓட்டை விற்பவர்களை முடிந்தால் மனம் மாற செய்யுங்கள். பெண்களின் கற்புக்கு சமமானது உங்கள் ஓட்டு. அந்த கற்பு உங்களுக்கு இருக்க வேண்டும். அப்படி நினைத்து விட்டால் நாளை நமதே.

தாயாக வணங்க வேண்டிய ஒரு ஆற்றை (நொய்யல்) சாக்கடையாக மாற்றி கொண்டிருக்கிறோம். இதை திருப்பி மீட்டெடுக்க இன்றே செய்ய வேண்டும். ஒரு விரல் புரட்சி செய்ய முடியும். நீங்கள் அரசியலை கவிழ்க்க முடியும். புதிய தமிழகத்தை உருவாக்கும் கௌாக நீங்கள் மாற வேண்டும். புதிய தமிழ்நாட்டை நம்கைகள் இணைந்தால் உருவாக்க முடியும். அதற்கு நீங்கள் மனம் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது வேட்பாளர் மோகன்ராஜ் உடன் இருந்தார். 

Next Story