மராத்தா மருத்துவ மாணவர்கள் போராட்டம் ஒரு வாரமாக நீடிப்பு


மராத்தா மருத்துவ மாணவர்கள் போராட்டம் ஒரு வாரமாக நீடிப்பு
x
தினத்தந்தி 16 May 2019 11:30 PM GMT (Updated: 16 May 2019 7:42 PM GMT)

இந்த ஆண்டு மருத்துவ முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது என மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை தீர்ப்பு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

மும்பை,

சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோர் பிரிவின்கீழ் மராத்தா வகுப்பினருக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி மராட்டிய அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் இந்த ஆண்டு மருத்துவ முதுகலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது என மும்பை ஐகோர்ட்டு நாக்பூர் கிளை தீர்ப்பு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. மேலும் சுப்ரீம் கோர்ட்டும் இந்த உத்தரவை உறுதி செய்தது.

இதன் காரணமாக முதுகலை மருத்துவ படிப்பில் சேர்க்கப்பட்டு இருந்த மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 250 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த மராத்தா சமுதாய மருத்துவ மாணவர்கள் மும்பை ஆசாத் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மந்திரி கிரிஷ் மகாஜன் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மராத்தா மாணவர்களை மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், கிரிஷ் மகாஜன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, மாநில அரசு இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்ததுடன், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆயினும் மராத்தா சமுதாய மாணவர்கள் போராட்டத்தை கைவிடாமல் ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story