புதுவை கடல் வளம் குறித்து ஆய்வு


புதுவை கடல் வளம் குறித்து ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 7:44 PM GMT)

புதுவை கடல்வளம் குறித்து நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

புதுச்சேரி, 

புதுவை கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையாகவே மணல்பரப்பு இருந்தது. தொடர்ந்து ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக மணல்பரப்பு காணாமல் போனது. கரைப்பகுதியும் அரிக்கப்பட்டதால் நகரை பாதுகாக்க கருங்கற்கள் கொட்டப்பட்டன.

இந்தநிலையில் புதுவை வரும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி விளையாட மணல் பரப்பு இல்லாததால் வேதனை அடைந்தனர். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் சார்பில் பரீட்சார்த்த முயற்சியாக ரூ.24 கோடி செலவில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

புதுவை தலைமை செயலகம் எதிரே கடலில் கற்கள் கொட்டப்பட்டு தூண்டில் முள் போன்ற வளைவு ஏற்படுத்தப்பட்டது. அதன்மேல் கூம்பு போன்ற இரும்பிலான அமைப்பு செய்யப்பட்டு கடலில் நீருக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் அலையின் திசை மாற்றங்கள் காரணமாக மணல்பரப்பு சேரும் என்று கூறப்பட்டது. அதேபோல் சமீப காலமாக தலைமை செயலகம் எதிரே மணல்பரப்பு உருவாகி உள்ளது. அந்த மணல் பரப்பில் சுற்றுலா பயணிகளும், பொது மக்களும் இறங்கி விளையாடி வருகின்றனர்.

சில நேரங்களில் அலையின் சீற்றம் காரணமாக செயற்கை மணல் பரப்பு காணாமல் போனாலும், அடுத்த சில நாட்களில் மணல் பரப்பு உருவாகி வருகிறது. இந்தநிலையில் கடல்வள ஆராய்ச்சி நிபுணர்கள் நேற்று அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தண்ணீருக்கடியிலும் சுவாசிக்கும் உபகரணங்களுடன் வந்த அவர்கள் நீண்டநேரம் கடலில் மூழ்கியிருந்து அந்த பகுதியில் கடல்நீரின் ஓட்டம், மீன்வளம் குறித்து ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் உள்ள கடல் உயிரினங்கள் சிலவற்றையும் அவர்கள் பிடித்து சென்றனர்.

Next Story