போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் புதுவை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை நகராட்சி சட்டம் 1973-ன்படி புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் (மாடு) வளர்ப்போர் அனைவரும் நகராட்சியில் கால்நடைகள் வளர்ப்போர் உரிமம் பெறுவது கட்டாயமாகும். இச்சட்டத்தின்படி மாடு வளர்ப்போர் தங்கள் மாடுகளுக்கு கொட்டகை அமைத்தல் மற்றும் சுகாதாரமாக பராமரிக்க வழிவகை செய்கிறது.
மேலும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பராமரிப்பின்றி போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் ரோடுகளில் திரியவிடுவது, புதுச்சேரி நகராட்சி சட்ட விதியின்படியும், போக்குவரத்து விதியின்படியும் குற்றமாகும். மேலும் ரோடுகளில் சுற்றித் திரியும் மாடுகளால் குறிப்பாக முதலியார்பேட்டை, சாரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே செஞ்சி சாலை, எஸ்.வி.பட்டேல் சாலை, குபேர் சாலை மற்றும் சுப்பையா சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், நேரு வீதி, கொசக்கடை வீதி மற்றும் ரங்கப்பிள்ளை வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை முன்னறிவிப்பின்றி பிடித்து அரசு அங்கீகாரம் பெற்ற மாடுகள் காப்பகத்தில் 48 மணி நேரத்தில் விடப்படும். அவ்வாறு விடப்படும் மாடுகளை திரும்பப்பெற இயலாது.
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், இதர பகுதிகளிலும் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதன்படி மாடு, காளைமாடு, கிடாரிக்கு ரூ.4,280-ம், பசுங்கன்றுக்கு ரூ.3,960-ம், எருமைக்கு ரூ.4,300-ம், எருமைக்கன்றுக்கு ரூ.4,020-ம் அபராதம் விதிக்கப்படும்.
அதுதவிர காவல்துறை மூலம் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும். 48 மணிநேரத்திற்கு மேல் பட்டியில் அடைக்கப்பட்ட மாடுகள் காப்பகத்திலோ அல்லது பொது ஏலத்திலோ விடப் படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story