புதுவை கடற்கரை சாலையில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி-ஊர்வலம் அரசு செயலாளர் தொடங்கிவைத்தார்


புதுவை கடற்கரை சாலையில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி-ஊர்வலம் அரசு செயலாளர் தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 16 May 2019 10:00 PM GMT (Updated: 16 May 2019 7:53 PM GMT)

புதுவை கடற்கரை சாலையில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் ஊர்வலத்தை அரசு செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி, 

புதுவை சுகாதாரத்துறையின் தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட அலுவலகம் சார்பில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சிகள் நடந்தன. இதையொட்டி டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் கடற்கரை காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டன.

மேலும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமும் நடந்தது. இந்த ஊர்வலத்தை சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா கொடி அசைத்து தொடங்கிவைத்தார். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் கொசு போன்ற வேடமணிந்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியும் சென்றனர். இந்த ஊர்வலம் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வரை நடந்தது.

அதைத் தொடர்ந்து கண்காட்சி அரங்குகளை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். இந்த கண்காட்சியில் நோயினி கடத்தி ஆராய்ச்சி நிறுவனம், ஆயுஷ் நிறுவனம் மற்றும் தேசிய பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட அலுவலகம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு கொசு வளர்கின்ற நீர்நிலைகள், வளர்ச்சி நிலைகள், இயற்கை முறையில் கொசுக்களை விரட்டுவது, கொசு உற்பத்தி செய்யும் தண்ணீர் தேங்கும் பொருட்கள், தேவையற்ற பொருட்களை கண்ட இடத்தில் வீசுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் கலந்துகொண்டு டெங்கு நோய் பற்றியும், அதனால் வரும் ஆபத்திலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ளும் வழிகளையும் விளக்கமாக எடுத்துரைத்தார். தேசிய சுகாதார மைய இயக்குனர் டாக்டர் மோகன்குமார் டெங்கு நோய் ஒழிப்பில் மக்களின் பங்கு குறித்து விரிவாக பேசினார்.

முன்னதாக மாநில திட்ட அதிகாரி சுந்தர்ராஜ் வரவேற்று பேசினார். முடிவில் மலேரியா உதவி இயக்குனர் கணேசன் நன்றி கூறினார்.

Next Story