சங்ககிரி, எடப்பாடி, மேட்டூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சங்ககிரி, எடப்பாடி, மேட்டூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சேலம்,
தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் எடப்பாடியை அடுத்த மொரசப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. முகாமிற்கு சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமை தாங்கினார்.
உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், எடப்பாடி இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கோகிலா ஆகியோர் கலந்து கொண்டு எடப்பாடி, சங்ககிரி பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். எடப்பாடியில் 76 வாகனங்களும், சங்ககிரியில் 90 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டன. மொத்தம் 166 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் முதலுதவி பெட்டி இல்லாமல் இருந்தது, வாகனங்களில் படிக்கட்டுகள் பழுதடைந்தது, அவசரகால கதவு செயல்படாமல் இருந்தது போன்றவற்றுக்காக 18 வாகனங்கள் தற்காலிகமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
முகாமில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து கூறும்போது, சென்ற ஆண்டு எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஓட்டிய டிரைவர்கள் எந்த விபத்தும் இல்லாமல் வாகனத்தை இயக்கியுள்ளனர். அதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.
இதையொட்டி எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முனியப்பன் தலைமையில் வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது தீயை அணைப்பது, குழந்தைகளை காப்பாற்றுவது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
சங்ககிரி அருகே மேட்டுக்கடையில் சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தாலுகாக்களில் உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த 174 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்தலிங்கம், சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின்போது 18 வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரியவந்தது. அதனால் 18 பள்ளி வாகனங்கள் தகுதி சான்று ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில் தீயணைப்பு நிலைய அதிகாரி கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள், பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்து செயல்முறை மூலம் விளக்கி காண்பித்தனர். இந்த ஆய்வில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேட்டூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த இந்த ஆய்வு பணி உதவி கலெக்டர் லலிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலன், மோட்டார் வாகன ஆய்வாளர் முரளி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் 105 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 5 வாகனங்களின் தகுதி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story