ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் கிருஷ்ணசாமி பேச்சு


ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் கிருஷ்ணசாமி பேச்சு
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 8:15 PM GMT)

ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என அரவக்குறிச்சி பிரசாரத்தில் கிருஷ்ணசாமி பேசினார்.

நொய்யல்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.வி.செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து புகளூர் ஹைஸ்கூல்மேடு, மோதிகாட்டூர், விஸ்வநாதபுரி, நஞ்சைக்காளக்குறிச்சி, சின்னதாராபுரம், ராஜபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் திறந்த வாகனத்தில் நின்றபடி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதியில் நீங்கள் வாக்களித்து வெற்றி பெற்றவர் (செந்தில்பாலாஜி), கட்சி மாறி கொள்கை மாறி திசை மாறி போனதால் தான் தற்போது தேர்தல் வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தற்போது மக்களுக்கான திட்டங்களை முன்வைத்து நல்ல முறையில் ஆட்சி செய்கிறார். பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசோடு சேர்த்து ரூ.ஆயிரம் வழங்கினார்.

அதன் பிறகு தற்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் வறுமையில் வாடுவோருக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதனை வழக்கு போட்டு தி.மு.க. தடுத்து விட்டது. எனினும் வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடியும். அதன்பிறகு 27-ந்தேதி தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்படும். இதன் பின்னர் மீண்டும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கும். மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்கி வரும் நல்ல மனிதர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவரை ஆட்சியிலிருந்து அகற்ற முயற்சிக்கின்றனர். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்றால், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவது பற்றி நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் பள்ளர் உள்ளிட்ட 6 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திரகுல வேளாளர் என மாற்றம் செய்ய நாம் போராடி வருகிறோம். அந்த கோரிக்கை விரைவில் நிறைவேறப்போகிறது. நம் முன்னோர் காலத்திலிருந்து 100 ஆண்டுகளாக இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம். தேர்தல் முடிந்ததும் அதை முதல்-அமைச்சர் நிறைவேற்றி தருவார். ஏழை, எளிய மக்களுக்கு அனைத்து விதமான சலுகைகள் வந்து சேரவும், ஊழல்வாதிகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க மக்கள் சிந்தித்து பார்த்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தந்து எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story