குறைவாக சம்பளம் வழங்கியதை கண்டித்து 100 நாள் பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டம்


குறைவாக சம்பளம் வழங்கியதை கண்டித்து 100 நாள் பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 May 2019 10:15 PM GMT (Updated: 16 May 2019 9:05 PM GMT)

வையம்பட்டி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கியதை கண்டித்து தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள சீகம்பட்டியை அடுத்த செங்காட்டுக்குளத்தில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் வத்தமணியாரம்பட்டி, கல்பட்டி சத்திரம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி குளத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 80 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பஸ் வசதி இல்லாத இந்த பகுதிக்கு ஆட்டோவில் சென்று வேலை பார்த்தோம். அப்படி இருந்தும்கூட குறைவாக 80 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதனை கண்டித்தும், அரசு நிர்ணயித்த தொகையை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியை 10 பேர் செய்வதால் இதுபோன்று வழங்கப்படுகிறது என்றனர்.

அதற்கு தொழிலாளர்கள், போதிய மழை இல்லாததால் குளங்கள் வறண்டு மண் இறுகி கிடக்கிறது. 2 பேர் சேர்ந்து வெட்ட முடியாததால் தான் அதிகம் பேர் சேர்ந்து வெட்ட வேண்டிய நிலை இருப்பதாக கூறினர். உங்கள் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் பணியை தொடங்கினர். 

Next Story