தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்காக சிவகாசியில் கள்ளத்தனமாக சரவெடிகள் தயாரிப்பு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்


தேர்தல் வெற்றி கொண்டாட்டத்துக்காக சிவகாசியில் கள்ளத்தனமாக சரவெடிகள் தயாரிப்பு - கண்டுகொள்ளாத அதிகாரிகள்
x
தினத்தந்தி 16 May 2019 9:45 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாட சிவகாசியில் இருந்து கள்ளத்தனமாக வெளி மாநிலங்களுக்கு சரவெடிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகாசி,

சுற்றுச்சுழலுக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சரவெடிகளை தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் சரவெடி தயாரிப்பை முற்றிலுமாக தவிர்த்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வெடிக்க தேவையான சரவெடிகள் கிடைக்காமல் அரசியல் கட்சியினர் திண்டாடினர். ஆனாலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாட தற்போது அதிகஅளவில் சரவெடிகளுக்கு ஆர்டர் கொடுத்து வருகிறார்கள்.

சரவெடி தயாரிக்க சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ள நிலையில் சிவகாசி பட்டாசு ஆலைகள் சரவெடி தயாரிக்காத நிலையில் சிவகாசி பகுதியில் உள்ள பல கிராமங்களில் தற்போது கள்ளத்தனமாக சரவெடி தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சரவெடிகள் வேறு பட்டாசுகளின் பெயர்களில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனுக்குடன் கூலி பட்டுவாடா செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதை எந்த துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக போலீசார் கடந்த காலங்களில் கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளை கைப்பற்றி, அதில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தனர். தற்போது கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பட்டாசு தொழிலுக்கு உள்ள நெருக்கடியை சிலர் பயன்படுத்தி கள்ளத்தனமாக தயாரிக்கப்படும் பல லட்சம் மதிப்புள்ள சரவெடிகளை சிலர் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். இதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story