மழை இல்லை - வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கண்மாய், ஊருணிகள் வறண்டதால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு


மழை இல்லை - வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, கண்மாய், ஊருணிகள் வறண்டதால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்று விட்டதால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை,

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்கள் என்று அழைக்கப்படுவது உண்டு. இந்த 2 மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய பருவ மழை நன்கு பெய்தால் மட்டுமே குடிநீர் பற்றாக்குறையை ஓரளவு சரிசெய்ய முடியும். ஆனால் இந்த இரு மாவட்டங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போனதால் இந்த பகுதியில் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் எல்லாம் வேறு வேலைக்கு செல்கின்றனர். சிவகங்கை மாவட்டம் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.

இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் பெய்ய வேண்டிய மழை நன்கு பெய்து இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் முற்றிலும் நிரம்பினால் மட்டுமே இந்த பகுதியில் விவசாயம் என்பது சாத்தியமானதாகும். சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பற்றாக் குறையை தீர்க்கும் பொருட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

திருச்சி காவிரி ஆற்றில் இருந்து தொடங்கி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கல்லல், இளையான்குடி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகள் வழியாக ராமநாதபுரம் வரை இந்த திட்டத்தின் கீழ் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செல்லும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மட்டும் கோடை காலங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறையை ஓரளவு சமாளித்து வருகின்றனர்.

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இம்மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், கோவில் ஊருணிகள், குடிநீர் ஊருணிகள், ஆழ் துளை கிணறுகள் ஆகியவைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இது தவிர, இந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் அதல பாதாளத்துக்கு போய்விட்டது. மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமிக்க முறையாக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த தவறியதால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, நாட்டரசன்கோட்டை, கல்லல், தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதி பொதுமக்கள் தினமும் குடிநீரை தேடி காலிக்குடங்களுடன் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீருக்காகவே இப்பகுதியினர் அதிக நேரம் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவர்கள் மிகுந்த தவிப்புக் குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை அருகே உள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் ஊருணி தண்ணீரை பொதுமக்கள் குடிநீராக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கடும் வெயில் காரணமாக ஊருணியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது.

இதையடுத்து ஊருணியின் உள்பகுதியில் உள்ள 2 கிணறுகளில் அப்பகுதி மக்கள் கயிறு மூலம் நீர் இறைத்து குடிநீரை சேமித்து வருகின்றனர். இதேபோல் காரைக்குடி அருகே பாதரக்குடி ஊருணி தண்ணீர் இன்றி வறண்டு போனதால் அந்த ஊருணியின் நடுவில் உள்ள கிணற்றில் இருந்து கயிறு மூலம் நீர் இறைத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “பாதரக்குடி ஊருணியில் எப்போதும் வற்றாமல் நீர் இருக்கும். இந்த ஊருணி தண்ணீர் எங்கள் பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்கி வந்தது. மேலும் இந்த தண்ணீரை குடிப்பதற்கு மட்டுமின்றி மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் இந்த ஊருணி முற்றிலும் வற்றிவிட்டது. அதன் நடுவில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம்.“ என்றனர். 

Next Story