மாவட்டம் முழுவதும் 470 பள்ளி வாகனங்கள் ஆய்வு


மாவட்டம் முழுவதும் 470 பள்ளி வாகனங்கள் ஆய்வு
x
தினத்தந்தி 16 May 2019 10:45 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 470 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

திண்டுக்கல்,

கோடை விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பள்ளிகளின் வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டன. இதனை கலெக்டர் டி.ஜி.வினய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பள்ளி வாகனம் ஒன்றை கலெக்டர் டி.ஜி.வினய் ஓட்டி பார்த்து ஆய்வு செய்தார். பள்ளி வாகனங்களில் பிரேக், படிக்கட்டுகள், இருக்கைகள், கதவு மற்றும் அவசரகால கதவு ஆகியவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். இதேபோல் வாகனங்களில் முதலுதவி பெட்டிகளை திறந்து மருந்துகளை பார்வையிட்டார். அப்போது ஒவ்வொரு மருந்தின் பயன்பாடு குறித்து தெரிந்து வைத்திருக்கும்படி டிரைவர்களிடம் அறிவுறுத்தினார்.

தீயணைப்பு கருவிகளை இயக்க தெரியுமா? என்று டிரைவர்களிடம் கேட்டார். சாலை விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். அதிவேகமாகவோ அல்லது செல்போனில் பேசியவாறோ வாகனங்களை ஓட்டி செல்லக்கூடாது. பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக போலீஸ் நிலையம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை வாகனத்தில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் தீயணைப்பு கருவிகளை இயக்குவது குறித்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு, தீயணைப்புத்துறையினர் விளக்கம் அளிக்கும்படி அறிவுறுத்தினார். இதற்கிடையே ஒருசில வாகனங்களில் சில குறைபாடுகள் இருந்ததை கண்டுபிடித்தார். அந்த குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பின்னர், மறுஆய்வு செய்யும்படி வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார்.

திண்டுக்கல்லில் 119 பள்ளிகளை சேர்ந்த 259 வாகனங்களும், வேடசந்தூரில் 20 பள்ளிகளை சேர்ந்த 69 வாகனங்களும், வத்தலக்குண்டுவில் 83 பள்ளிகளை சேர்ந்த 117 வாகனங்களும், நத்தத்தில் 10 பள்ளிகளை சேர்ந்த 25 வாகனங்களும் என நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 470 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதேபோல் பழனி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பழனி மற்றும் ஒட்டன்சத்திரத்தில் ஏற்கனவே 32 பள்ளிகளை சேர்ந்த 200 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story