கோழி இறைச்சி கடையில் வைத்து விற்பனை, 260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி கைது


கோழி இறைச்சி கடையில் வைத்து விற்பனை, 260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி கைது
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 9:40 PM GMT)

திண்டுக்கல்லில் 260 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கோழி இறைச்சி கடையில் வைத்து விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் ஏ.எம்.சி.சாலையில் ஒரு கோழி இறைச்சி கடையில், புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேஸ்வரன், சுல்தான்பாட்சா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

மேலும் இறைச்சிக்கடைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அங்கு இருந்தன. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கோழி இறைச்சி வியாபாரியான குமரன்திருநகரை சேர்ந்த நாகராஜன் (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி இறைச்சி கடையில் வைத்து விற்றது தெரியவந்தது.

மேலும் மாசிலாமணிபுரம் ராமர்காலனியில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்த புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் இறைச்சி கடை மற்றும் வீட்டில் இருந்த 260 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story