மாவட்ட செய்திகள்

முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் விசாரணை: கமல்ஹாசனை கைது செய்ய அவசியம் உள்ளதா? என நீதிபதி கேள்வி + "||" + Inquiry into Madurai's petition on Munafi Manu: Is it necessary to arrest Kamal Haasan? The judge asked

முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் விசாரணை: கமல்ஹாசனை கைது செய்ய அவசியம் உள்ளதா? என நீதிபதி கேள்வி

முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் விசாரணை: கமல்ஹாசனை கைது செய்ய அவசியம் உள்ளதா? என நீதிபதி கேள்வி
சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில், கமல்ஹாசனை கைது செய்ய அவசியம் உள்ளதா என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மதுரை,

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீது மதுரை ஐகோர்ட்டில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது கமல்ஹாசனை கைது செய்ய அவசியம் உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். தேர்தல் முடியும் வரை சர்ச்சை பேச்சு குறித்து ஊடகங்களில் விவாதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தினார்.


மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின்போது இந்து மதத்தை அவமதித்தும், மக்கள் இடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாகவும் கடந்த 14-ந்தேதி அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றச்சாட்டு குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தாமல், புகாரின் அடிப்படையில் மட்டுமே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, இடைக்கால மனுவை மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி பி.புகழேந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கமல்ஹாசன் தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள புகார் குறித்து எந்த விசாரணையும் நடத்தாமல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனுதாரர் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விஷயத்தில் தற்போது வரை எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை. மனுதாரர் மீது புகார் கூறியவர், அந்த சம்பவத்தின்போது அங்கு இல்லை. தகவல்களின் அடிப்படையில்தான் புகார் அளித்துள்ளார். மனுதாரர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர் பேசியது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றால், இதுதொடர்பாக தேர்தல் கமிஷன்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இதுதொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது” என்று வாதாடினார்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “மனுதாரர் மீது இதுவரை 75-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இன்னும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் மனுதாரர் பேசியுள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மனுதாரர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் நேரடியாக பேசியுள்ளாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து கமல்ஹாசன் பிரசாரத்தின்போது பேசியது தொடர்பாக செல்போனில் பதிவாகி இருந்த வீடியோ நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது.

பின்னர், “மனுதாரர் கமல்ஹாசனை கைது செய்து விசாரணை நடத்தும் அவசியம் ஏற்பட்டுள்ளதா?” என்று அரசு வக்கீலிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசு வக்கீல், “அவருக்கு சம்மன் அனுப்பி முறையாக விசாரணை நடத்தப்படும்” என்றார்.

“அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால், அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அரசு வக்கீல், “விசாரணையின்போது மனுதாரரின் பதில் திருப்தி அளிக்காதபட்சத்தில் கைதாக வாய்ப்பு உள்ளது. ஆனால் முதற்கட்டமாக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும். சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் அச்சப்பட தேவையில்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட கமல்ஹாசனின் வக்கீல், “மனுதாரர் தற்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே இந்த வழக்கில் விசாரணை நடவடிக்கையை அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதிக்கு பின்னர் போலீசார் எடுக்க வேண்டும்” என்றார்.

முத்துக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “மனுதாரர் அரசியல் ஆதாயங்களுக்காக இந்து மதம் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். கோட்சேவை தீவிரவாதி என்றும் கூறியுள்ளார். தீவிரவாதி என்பவர் மக்களை கொன்று குவித்து, தானும் தற்கொலை செய்வதையோ அல்லது அங்கிருந்து தப்பிக்க நினைப்பவர்தான் தீவிரவாதி என்று ஐ.நா. சபை விதிகளில் கூறியுள்ளது. ஆனால் காந்தியை துப்பாக்கியால் சுட்டபின்பு, கோட்சே அங்கிருந்து தப்ப முயற்சிக்கவில்லை. வரலாற்றை திரித்து அவர் பேசியுள்ளார். எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, இனிவரும் காலங்களில் இதுபோல் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதாடினர்.

வக்கீல்களின் வாதங்களை பதிவு செய்த நீதிபதி, “இடைத்தேர்தல் முடியும் வரை கமல்ஹாசனின் பேச்சு பற்றி அரசியல் கட்சியினரோ, ஊடகங்களோ விவாதிக்க கூடாது. அவ்வாறு விவாதித்தால் தேவையில்லாத பிரச்சினைகள் எழ வாய்ப்பு உள்ளது” என்று அறிவுறுத்தினார்.

பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தர விட்டார்.