வாணாபுரம் அருகே விடுமுறை நாட்களிலும் திறந்து கிடக்கும் அரசுப்பள்ளி
வாணாபுரம் அருகே விடுமுறை நாட்களிலும் திறந்து அரசுப்பள்ளி கிடக்கிறது. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்,
வாணாபுரம் அருகே தச்சம்பட்டில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800–க்கும் மேற்பட்ட மாணவ –மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது தேர்வு முடிந்து மாணவ– மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் பள்ளியின் வகுப்பறை கட்டிடம் திறந்து கிடக்கிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–
விடுமுறை விடப்பட்ட சில நாட்களில் இப்பகுதியை சேர்ந்த சிலர் சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்று வகுப்பறையை திறந்து விடுகின்றனர். வகுப்பறைக்குள் இருக்கும் மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வெளியில் கொண்டு வந்து போட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் வகுப்பறைக்குள் சமூகவிரோத செயல்களும் நடைபெறுகிறது.
அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பள்ளியில் உள்ள வகுப்பறைகள் அனைத்தும் திறந்து கிடைப்பதால் வகுப்பறையில் இருக்கும் மேஜை,நாற்காலிகள் உள்ளிட்டவைகள் திருட்டுபோக வாய்ப்பு உள்ளது. எனவே மாணவ –மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வகுப்பறையில் இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் திறந்து கிடக்கும் கட்டிடத்தை பூட்டு போட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.